/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு புகார் உண்மை'
/
'பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு புகார் உண்மை'
ADDED : பிப் 09, 2024 11:07 AM
கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையிலான தமிழக சட்டசபை மதிப்பீட்டுக்குழு, நேற்று திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தது. எல்.எல்.ஏ.,க்கள் சிந்தனைச்செல்வன், பரந்தாமன், ராமச்சந்திரன், காந்திராஜன், செல்லுார் ராஜூ ஆகிய மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் திட்ட பணிகள் குறித்து, காலை முதல் மாலை வரை, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், டி.ஆர்.ஓ., ஜெய்பீம் முன்னிலையில், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில், குழுவினர் பங்கேற்றனர். மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தலைமைவகித்தார்.
ஒவ்வொரு துறை சார்ந்து செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் நிலை குறித்து, அந்தந்த துறை அதிகாரிகளிடம், மதிப்பீட்டுக்குழுவினர் கேட்டறிந்தனர்.
'பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு நடப்பதாக புகார் எழுகிறது; தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்', என, குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ஆழியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் காஞ்சிதுரை, பி.ஏ.பி., பிரதான வாய்க்கால், திருமூர்த்தி அணையிலிருந்து வெள்ளகோவில் வரை செல்கிறது. திறந்த வெளி கால்வாய்; கால்வாயின் இருபுறமும் பாசன பகுதிகள் உள்ளன. சிலர், குழாய் அமைத்து, வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருடுகின்றனர். திருட்டை தடுக்க கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்போது, குழு ரோந்து சென்று, திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது,' என்றார். 'தண்ணீர் திருட்டு சம்பந்தமாக இதுவரை எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்கிற, குழு உறுப்பினர்கள் கேள்விக்கு, அதிகாரியால் பதில் சொல்லமுடியவில்லை. டென்ஷனான குழுவினர், 'பி.ஏ.பி.,ல் தண்ணீர் திருட்டை நடப்பதை நீங்கள் சரிவர கண்காணிக்கவில்லை; தண்ணீர் திருட்டு தொடர்பாக விவசாயிகள் கூறும் புகார்கள் உண்மை என்பது நிரூபணமாகிறது,' என்றனர்.

