ADDED : மார் 07, 2024 02:27 AM
புன்செய்புளியம்பட்டி, பாசனத்திற்கு, 3,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு கடந்த ஜன., 7 முதல் கீழ்பவானி வாய்க்காலில் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. மே 1 வரை, 12 டி.எம்.சி.,க்கு மிகாமல் ஐந்து சுற்றுக்களாக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது. கோடை துவங்கியுள்ளதால், அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்தது. நேற்று பவானிசாகர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 36 கனஅடியாக சரிந்தது. நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 66.13 அடியாகவும், நீர் இருப்பு, 9.4 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர், அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு, 800 கன அடி தண்ணீர், குடிநீருக்காக, 100 கன அடி தண்ணீர் என மொத்தம், 3,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
நீர்வரத்தை விட, வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்தாண்டு இதே நாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம், 93.95 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

