ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து பீஹார் மாநில சிறுவர்கள் வெறி
ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து பீஹார் மாநில சிறுவர்கள் வெறி
ADDED : மே 27, 2026 04:26 AM
தாராபுரம்: தாராபுரம் அருகே, ஆட்டோ கட்டணம் அதிகமாக கேட்டதாக கூறி, டிரைவரின் கழுத்தில் கத்தியால் குத்திய, பீஹார் மாநில சிறார்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாராபுரம், சீதா நகரை சேர்ந்தவர் ஜோஸ் டெவின் ஆரோக்கியராஜ், 55; ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில், தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பீஹார் மாநில சிறுவர்கள் மூவரை ஏற்றிக்கொண்டு, குண்டடம் பனமரத்துப்பாளையம் சென்றார். பனைமரத்துப்பாளையம் பிரிவு அருகே இறங்கிய மூவரும், வாடகை அதிகம் எனக் கூறி வாக்குவாதம் செய்தனர்.
அப்போது காய்கறி நறுக்கும் கத்தியால் ஆரோக்கியராஜின் கழுத்தில் குத்தி கிழித்தனர். இதில் காயமடைந்தவர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ஈடுபட்ட மூன்று சிறார்களும், உப்பாறு அணை பகுதியில், அவர்களின் பெற்றோர் வேலை செய்யும் கோழிப்பண்ணையில் இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
