ADDED : ஜன 30, 2026 05:43 AM
சென்னிமலை: சென்னிமலை அருகே குடிபோதையில், அண்ணனை கொலை செய்த தம்பியை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, ஈங்கூர் ஊராட்சி செங்குளம், அம்மன் நகரை சேர்ந்தவர் மதன்குமார், 26; சிப்காட் டெக்ஸ்டைல் ஊழியர். இவரது தம்பி சக்திவேல், 25; கட்டட தொழிலாளி. இருவருக்கும் குடிப்பழக்கம் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக வேலைக்கு செல்லாமல், மதன்குமார் வீட்டிலேயே தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இதை சக்திவேல் நேற்று முன்தினம் மாலை கண்டித்துள்ளார். அப்போது அவரும் போதையில் இருந்ததால், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் சக்திவேல் தாக்கி தள்ளிவிட்டதில் மதன்குமார் கீழே விழுந்து மயங்கியுள்ளார்.
அப்படியும் ஆத்திரம் அடங்காமல், வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து, அப்பகுதியில் கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து தலையில் போட்டதில், மதன்குமார் தலை சிதைந்து பலியானார். கொலை செய்த பின், 108 அவசரகால ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, தனது அண்ணன் காயங்களுடன் வாசலில் விழுந்து கிடப்பதாக கூறியுள்ளார். அங்கு சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், மதன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். தகவலறிந்து சென்னிமலை போலீசார் சென்று, உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சக்திவேலின் நடத்தையில் சந்தேகமடைந்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், அண்ணனை கொலை செய்ததை சக்திவேல் ஒப்புக்கொண்டார். சக்திவேலை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
