ADDED : ஏப் 15, 2026 06:45 AM
டி.என்.பாளையம் : வேலுார் மாவட்டம், ரங்காபுரம் பகுதியை சேர்ந்த சபாரத்தினம், 32, என்பவர் தனது குடும்பத்தினருடன் கொடிவேரி அணைக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார். இவர் தமிழ்நாடு சூரிய ஒளி மின்சார உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், வேலூர் மண்டலம் -1ல் வணிக வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் கொடிவேரி அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர், அப்போது சபாரத்தினம் குளித்துக் கொண்டிருந்த இடத்திற்கு அருகே நின்றிருந்த இருவர், அவரது கழுத்து பகுதியில் தொடுவது போல சபாரத்தினம் உணர்ந்துள்ளார். பிறகு தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்தபோது காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திலேயே அந்த இரண்டு பேரையும், அங்கிருந்தோர் பிடித்து விசாரித்தபோது, செயினை கட்டர் மூலம் வெட்டி திருடியதை ஒப்புக் கொண்டனர். பிடிபட்ட இருவரையும் பங்களாப்புதூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட இருவரும் சகோதரர்கள் என்றும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் நிதிஷ்குமார் 21, என்பதம், இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது 17 வயது சகோதரர் பாலிடெக்னிக் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு கொடிவேரி அணைக்கு வந்த நிதிஷ்குமார், அங்கு குளித்துக் கொண்டிருத்த இரண்டு பெண்களின் செயினை பறித்துச் சென்றதாகவும், அந்த நகைகளை கோவையில் உள்ள தனது அறையில் வைத்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து நிதிஷ்குமார் கோவையில் மறைத்து வைத்திருந்த நகைகளை அங்கு சென்று போலீசார் மீட்டனர். நிதிஷ்குமாரை கைது செய்த பங்களாப்புதுார் போலீசார், கோபி நீதிமன்ற காவலுக்கு அவரை அனுப்பி வைத்தனர். 17 வயது சகோதரரை கோவை இளம் சிறார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.
