அந்தியூர், அந்தியூர் தாலுகாவில் வனத்தை ஒட்டிய விவசாயிகளின் பட்டாவில், நிபந்தனையை நீக்க வலியுறுத்தி, பாலக்குட்டை என்ற இடத்தில் விவசாயிகள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் ஆதரவு திரட்ட, பைக்குகளில் கருப்புக்கொடி கட்டி, ஊர்வலமாக சென்று இட்ரக்கல் மாரியம்மன் கோவிலில் கூடினர்.
தகவலறிந்து சென்ற அந்தியூர் போலீசார், அனுமதியில்லாமல் கூட்டம் சேரக்கூடாது. ஊர்வலம் நடத்தக்கூடாது என்று கூறி, கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
அப்போது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், விவசாயி ஒருவரை தகாத வார்தையால் பேசியுள்ளார்.இதனால் இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, 250க்கும்
மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக, 50 விவசாயிகள் மீது, நான்கு பிரிவுகளில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே இன்ஸ்., செந்தில்குமார் மீது, விவசாயிகள் தரப்பில் எஸ்.பி., சுஜாதாவிடம் புகார் தரப்பட்டுள்ளது.