ADDED : ஏப் 29, 2026 06:12 AM
அவிநாசி:திருப்பூர் மாவட்டம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர்த்விழா நேற்று வெகு விமர்சையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். ஆனால், தேரோட்டம் துவங்க தாமதமானதால், பக்தர்கள் அவதிப்பட்டனர்.
பெரிய தேரோட்டம், காலை, 8:00 மணிக்கு துவங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எமகண்டம் என்பதால், 10.31 மணிக்கு தான் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர்தல் காரணமாக முன்கூட்டியே பள்ளி தேர்வுகள் முடிந்து அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை விடப்பட்டதால்,தேர் விழாவில் இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் கூட்டம், காலை 8:30 மணி முதலே
தேர் வடத்தின் அருகில் கூட துவங்கினர்.அதேசமயம் வெயில் கொளுத்தியதால் பெருமாள் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் தேரோட்டம் துவங்கும் முன்பே தலைசுற்றல் ஏற்பட்டு மயக்க நிலைக்குச் சென்றார். அருகில் இருந்தவர்கள் நிழலுக்கு அழைத்துச் சென்று தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
அதேபோல சிறிது நிமிடங்களிலேயே, நடுத்தர வயது பெண் ஒருவர் மயக்கமுற்றார். உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள் முதலுதவி அளித்ததால், இயல்பு நிலைக்கு திரும்பினார். இதேபோல, மேற்கு ரத வீதி சந்திப்பு வரும்போது, வடம் பிடித்திருந்த இரு பெண்கள் மற்றும் ஒரு முதியவர் என கடும் வெயிலால் அடுத்தடுத்து மயக்க நிலைக்குச் சென்றனர்.
