ஒரே சமயத்தில் 25 ஜோடிகளுக்கு திருமணம் களை கட்டிய சென்னிமலை மலை கோவில்
ஒரே சமயத்தில் 25 ஜோடிகளுக்கு திருமணம் களை கட்டிய சென்னிமலை மலை கோவில்
ADDED : பிப் 23, 2026 06:42 AM

சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருமணம் நடப்பது வழக்கமாக உள்ளது. மாசி மாத வளர்பிறை முகூர்த்த நாளான நேற்று மட்டும், 25 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் அதிகாலை, 4:00 மணி முதலே, கோவில் களை கட்ட தொடங்கியது.
மேளதாள முழக்கம், நாதஸ்வர இசை என ஒட்டுமொத்த கோவில் வளாகமும், திருமண மண்டபமாகவே உருமாறியது. கடந்த ஆவணி மாதத்துக்கு பிறகு, அதிக எண்ணிக்கையில் நேற்று திருமணம் நடந்தது. திருமண தம்பதிகள், அவர்களது உறவினர்கள், கேமராமேன்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், கோவில் வளாகம் திருவிழா கோலம் பூண்டது.
வாகனங்களில் குவிந்த உறவினர்களால், மலைப்பாதையில் போக்குவரத்து ஸதம்பித்து, ஒரு கி.மீ., துாரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் புதுமண ஜோடிகள் பலர், மணக்கோலத்தில் மலைப்பாதையில் நடந்து சென்று தங்கள் வாகனங்களைத் தேடி அலைந்தனர். உறவினர்களும் ஒருவரை ஒருவர் தேடி அலைந்ததும், மகிழ்ச்சி ஆரவாரமும் சென்னிமலை கோவிலை மங்கல கடலாகவே மாற்றியிருந்தது. சஷ்டி தினம் என்பதால், பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
