ADDED : ஏப் 28, 2026 05:42 AM
டி.என்.பாளையம், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாடசாமி மகன் ஆதிகுரு, 20; கோவை தனியார் கல்லுாரி மூன்றாமாண்டு மைக்ரோ பயாலஜி மாணவன். தன்னுடன் படிக்கும் சக கல்லுாரி மாணவர்கள், 17 பேருடன், கார் மற்றும் பைக்குகளில், பங்களாப்புதுார் அருகே நஞ்சை புளியம்பட்டியில் ஓடும் பவானி ஆற்றுக்கு நேற்று மதியம் வந்தனர். அனைவரும் ஆற்றில் குளித்தபோது ஆதிகுரு ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கி மாயமானார்.
இதையறிந்த பிற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து கூக்குரல் எழுப்பினர். இதைக்கேட்ட அப்பகுதி மக்கள், கோபி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தந்தனர். அங்கு சென்ற வீரர்கள் தேடியபோது, சில மணி நேரத்துக்கு பிறகு, குளித்த இடத்தில் இருந்து சிறிது துாரத்தில், ஆதிகுருவை சடலமாக மீட்டனர். பங்களாப்புதுார் போலீசார் உடலை கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
