ADDED : மே 09, 2026 04:32 AM
பவானி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள மரவபாளையத்தான்காட்டை சேர்ந்தவர் தமிழரசு, 26; திருச்செங்கோடு தனியார் பொறியியல் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர்.
கல்லுாரிக்கு நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து சென்றார். இந்நிலையில் மகன் வரவில்லை என்று, கல்லுாரியில் இருந்து பெற்றோருக்கு தகவல் போனது.
தமிழரசுவின் மொபைல் எண்ணை பெற்றோர் தொடர்பு கொண்டனர்.
நீண்ட நேரத்துக்கு பிறகு அழைப்பு ஏற்கப்பட்ட நிலையில் அதில் பேசியவர், பவானி அருகே லட்சுமிநகர் காவிரி ஆற்றில், ஆற்று நீரில் மூழ்கி விட்டார். அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
உறவினர்களுடன் அங்கு சென்றபோது, மகனின் நண்பனும், சக கல்லுாரி மாணவருமான வெப்படையை சேர்ந்த சஞ்சயிடம் விபரம் கேட்டுள்ளனர்.
கல்லுாரிக்கு கட் அடித்த தமிழரசு, பைக்கில் லட்சுமி நகருக்கு வந்தார். இருவரும் காவிரி ஆற்றில் குளிக்க இடம் தேடி சென்றோம். அப்போது கால் தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.
அங்கிருந்தோர் உதவியுடன் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்தார். அதேசமயம் மருத்துவ பரிசோதனையில் தமிழரசு பலியாகி விட்டது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
