அதிகபட்ச ஓட்டுப்பதிவால் குழப்பம் பூத் வாரியாக ஓட்டுகளை அலசும் வேட்பாளர்
அதிகபட்ச ஓட்டுப்பதிவால் குழப்பம் பூத் வாரியாக ஓட்டுகளை அலசும் வேட்பாளர்
ADDED : ஏப் 25, 2026 05:52 AM
ஈரோடு வழக்கத்தைவிட கூடுதலாக ஓட்டுப்பதிவானதால், கட்சியினரும், வேட்பாளர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் பூத் வாரியாக பதிவான ஓட்டுக்களை ஆய்வு செய்து, தனிக்கணக்கு போட்டு வருகின்றனர்.
எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு பின், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், விலாசம் மாற்றம் செய்யாதவர்கள், ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராக இருத்தல் போன்றவை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஓட்டுப்பதிவும் அதிகமாக நடந்துள்ளது. குறிப்பாக, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு உட்பட பல மாவட்டங்களில், 90 சதவீதத்துக்கு மேல் ஓட்டுப்பதிவாகி உள்ளது.
வழக்கம்போல, ஓட்டுப்பதிவுக்கு மறுதினம், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியினர், தங்களது பூத் ஏஜென்ட்டை அழைத்து, பதிவான, பதிவாகாத ஓட்டுக்கள், அதில் அந்தந்த கட்சிக்கான ஓட்டு, மாறிப்போகும் ஓட்டுக்களை ஆய்வு செய்வார்கள். பெரும்பாலான பூத்களில் அவை மிகச்சரியாக இருக்கும். இதுபோல நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றும் நடந்தது.
இதுபற்றி மூத்த கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு வழக்கமாக ஓட்டு செலுத்துவோர், இம்முறையும் செலுத்தி உள்ளனர். அதில், இரு கட்சிக்கும் ஒவ்வொரு பூத்திலும், 2 முதல், 3 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளது. அதேநேரம், ஒவ்வொரு பூத்திலும் புதியவர்கள், 15 சதவீதம் வரை பதிவு செய்துள்ளனர்.
இவர்களது ஓட்டு யாருக்கு செல்லும் என்பது குழப்பம். வயது வாரியாக பிரித்து பார்த்தால், புதியவர்களை நாடி செல்வார்களோ என்ற அச்சமும், கட்சி சார்ந்தவர்களின் குடும்பத்து ஓட்டு அதே கட்சிக்குத்தான் விழும் என்ற ஆறுதலும் பேசி வருகிறோம். இரு கட்சியிலும் கவனிப்பு அதிகமானதால், ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளது. கவனிப்பு இல்லாத பகுதிகளில் ஓட்டு சரிந்துள்ளது. இவ்வாறு கூறினர். அதேநேரம் பல தொகுதிகளில் புதியவர்களின் ஓட்டு, தேர்தல் முடிவை மாற்றி அமைக்கும் என்பதும் உறுதியாகி உள்ளதால், பிரதான கட்சி முதல் அனைத்து கட்சியினரும் சற்று பீதியிலேயே உள்ளனர்.
