தொடர்ந்த புத்தக வாசிப்பு நம்மை மாற்றும்; அமைச்சர் பேச்சு
தொடர்ந்த புத்தக வாசிப்பு நம்மை மாற்றும்; அமைச்சர் பேச்சு
ADDED : ஆக 01, 2026 06:34 AM
ஈரோடு:ஈரோடு சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லுாரியில்,
மாவட்ட நிர்வாகம், மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத்திருவிழா தொடங்கியது.
மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன்
வரவேற்றார். சிந்தனை அரங்கை திறந்து வைத்து, கைத்தறித்துறை
அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதாவது: நான் அமைச்சரான பின்னர்தான்
புத்தகங்களை ஆர்வமாக படிக்கிறேன். நான் செல்லும் இடங்களில் பேச
வேண்டி உள்ளதால், அதற்கு தயார்படுத்தி கொள்ள வேண்டி உள்ளதால் அதிகம் படிக்கிறேன். இவ்வாறு பேசினார்.
புத்தக
அரங்கை திறந்து வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
பேசியதாவது: புத்தகம் படிப்பது என்பதில் பல ரகம் உள்ளது. புத்தகம்
படிக்கும்போது ஒவ்வொரு மனிதர்களுக்கும், ஒரு புத்தகம், சில
கதைகள் இருக்கும். அதை அறிய நாம் படித்து கொண்டே இருக்க வேண்டும். அது
நம்மை மாற்றும். நல்ல நுாலை தேடிப்படிக்க ரசனை உள்ள வாசகன் தேவை.
எழுத்தாளர்கள்,
கவிஞர்கள், பதிப்பாசிரியர்கள் துன்பங்களை கடந்து, நுால்களை
பதிப்பிக்கிறார்கள். பல பதிப்பாளர்கள், தங்கள் வாழ்க்கை,
குடும்பங்களை இழந்தும், பதிப்பிப்பதை விடாதது அறிந்த போது, நுாலின்
மகத்துவம் தெரிகிறது. இவ்வாறு பேசினார்.
நிகழ்வில் கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஈரோடு மேற்கு அனந்த்மோகன், மொடக்குறிச்சி சண்முகன், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், எஸ்.கே.எம்.மயிலானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட நுாலகர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
புத்தக திருவிழாவில் இன்று
புத்தக
கண்காட்சி வரும், 11ம் தேதி வரை தினமும் காலை, 11:00 முதல் இரவு, 9:30
மணி வரை நடக்கும். இன்றைய மாலை நேர அரங்கில், 'கவிஞர் கண்ணதாசன்
நுாற்றாண்டு நிகழ்வு - காவிரித்தாயின் இளைய மகன்' என்ற தலைப்பில்
தமிழருவி மணியன் பேசுகிறார்.
'ஆச்சர்யம் தரப்போகும்தென்காசி ஆய்வு முடிவு'
நிகழ்வில்
அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: கீழடி அகழாய்வில் யானை தந்தத்தில்
செய்த சீப்பு, பவள மணிகள், பகடைக்காய் என பலவும் கிடைத்தது. எனது
துறையாக தொல்லியல் வருவதால், மதுரை, விருதுநகர், தென்காசி
பகுதியில் தொல்லியல் ஆய்வு நடப்பதை நானே நேரில் கண்டேன். தென்காசி மலை
அடிவாரத்தில் கிடைத்த சில தரவுகளை, ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.
அதன் முடிவு வரும்போது, கீழடிக்கும் முந்தைய காலத்தில் மனிதர்கள்
வாழ்ந்த காலத்தை நாம் அறியும் வாய்ப்பு ஏற்படும், என
எதிர்பார்க்கிறோம்.
