/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொப்பரை விலை உச்சம் கிலோ ரூ.187ஐ கடந்தது
/
கொப்பரை விலை உச்சம் கிலோ ரூ.187ஐ கடந்தது
ADDED : ஏப் 04, 2025 02:19 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கம், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, கொடுமுடி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில், காங்கேயம் உட்பட, பல ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், தனியார் மண்டிகளில் கொப்பரை தேங்காய் அதிகம் விற்கிறது.
இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் 1 கிலோ, 187 ரூபாயை கடந்தது. கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் கூறியதாவது:
கொப்பரை, 2018ல் அதிகபட்சமாக, 147 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம், பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் முதல்தரம் கிலோ, 154 முதல் 187.18 ரூபாய், இரண்டாம் ரகம், 32 ரூபாய் முதல் 182.49 ரூபாய் வரை ஏலம் போயுள்ளது. இதேபோல், மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முதல் தரம் கிலோ 172.60 --- 181.99 ரூபாய்க்கு விற்பனையானது.
ஏப்., முதல் அக்., வரை தேங்காய், கொப்பரை தேங்காய் சீசன். அடுத்த 15 நாட்களில், காய்வரத்து அதிகரிக்கும் போது, விலை குறையும் என, வியாபாரிகள் கருதுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கொப்பரை தேங்காய் விலை உச்சம் தொட்டாலும், தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்து, 100 காய் பிடிக்க வேண்டிய இடத்தில், 10 காய் மட்டுமே பிடிக்கிறது.
இதனால், வெள்ளை ஈ நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

