ADDED : ஏப் 29, 2026 05:43 AM
ஈரோடு:மே, 4 ல் நடக்க உள்ள ஓட்டு எண்ணிக்கை பணி செய்யும் நுண் பார்வையாளர், மேற்பார்வையாளர், உதவியாளர்களுக்கான பணி ஒதுக்கீடு, கலெக்டர் கந்தசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் ஆணைய இணைய தளத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் கணினி சுழற்சியில், பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் என ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியிலும், கோபி, பவானிசாகர் தொகுதிகளுக்கு, கோபி கலை அறிவியல் கல்லுாரியிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
அன்று காலை, 7:00 மணிக்கு தபால் ஓட்டுகள் எடுத்து வந்து பிரித்து எண்ணும் பணியும், 8:00 மணி முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா, 17 மேற்பார்வையாளர், தலா, 17 உதவியாளர், தலா, 17 நுண் பார்வையாளர் என, 408 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,379 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒரு தொகுதிக்கு தலா, 14 மேஜைகள் வீதம், 112 மேஜைகளில் நடைபெறும்.
தபால் ஓட்டு எண்ணும் பணியில், 56 மேற்பார்வையாளர், 112 உதவியாளர், 56 நுண் பார்வையாளர் ஈடுபட உள்ளனர். தபால் ஓட்டு எண்ணும் பணி, 48 மேஜைகளில் நடக்க உள்ளது. இவர்களுக்கும் கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அர்பித் ஜெயின், கோபி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தம், ஈரோடு மேற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்துஜா, கணினி நிரலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
