படிக்கட்டு வழியாக சென்னிமலைகோவிலுக்கு சென்ற பக்தர் சாவு
படிக்கட்டு வழியாக சென்னிமலைகோவிலுக்கு சென்ற பக்தர் சாவு
ADDED : மே 15, 2026 06:12 AM
சென்னிமலை:: சென்னிமலை மலைக்கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்ற பக்தர், மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு, மாணிக்கம்பாளையம், வி.என்.எம்., சின்னகவுண்டர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 64; கடந்த பல ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும், சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, படிக்கட்டு வழியாக, ராஜேந்திரன் நடந்து சென்று வழிபடுவது
வழக்கம். நண்பர் கந்தசாமியுடன் வியாழக்கிழமையான நேற்று காலை, 7:00 மணிக்கு, படிக்கட்டு வழியாக கோவிலுக்கு நடந்து சென்றார். 60 படிக்கட்டுகளை கடந்த நிலையில், ராஜேந்திரனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். கந்தசாமி அதிர்ச்சி அடைந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தார். சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதில் மாரடைப்பு ஏற்பட்டது உறுதியானது. பிறகு மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர். உயிரிழந்த ராஜேந்திரனுக்கு, மனைவி பூங்கொடி, மகன் தங்க மிதுன் உள்ளனர்.
