/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் மழையால் வெல்லம் உற்பத்தி பாதிப்பு
/
தொடர் மழையால் வெல்லம் உற்பத்தி பாதிப்பு
ADDED : ஜூலை 29, 2011 12:44 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி வட்டாரத்தில் பெய்து வரும் தொடர் மழையால்
எரிபொருளாக பயன்படுத்தப்படும் கரும்பு சருகுகள் காயாததால் வெல்லம் உற்பத்தி
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோபி, கொளப்பலூர், கடத்தூர்,
கணக்கம்பாளையம், சிறுவலூர், குறவம்பாளையம், புஞ்சை துறையம்பாளையம்,
பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, அத்தாணி, வெள்ளாங்கோவில், குருமந்தூர்
உள்ளிட்ட பகுதிகளில் உருண்டை வெல்லம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கரும்பு சாற்றை பெரிய கொப்பரையில் ஊற்றி ஒரு மணி நேரம் வரை அடுப்பில்
பதப்படுத்தி, வெல்லம் தயாராகும். கரும்பு சாற்றை பதப்படுத்த, சாறு
பிழியப்பட்ட கரும்பு சருகுகளை காய வைத்து எரிபொருளாக பயன்படுத்துவர். ஈரோடு
மாவட்டத்தில் கோபி, சத்தி, பவானி, நம்பியூர், பவானிசாகர் மற்றும்
டி.என்.பாளையம் வட்டாரங்களில் சென்ற ஒரு வாரமாக மழை பெய்கிறது. தொடர்
மழையால் ஏற்பட்ட குளிர்ந்த சீதோஷ்ண நிலையால், கோபி மற்றும் சுற்று வட்டார
பகுதிகளில் வெல்லம் உற்பத்தியில் கடும் பாதித்துள்ளது. சாறு பிழியப்பட்ட
கரும்பு சருகுகளை காய வைக்க முடியாமல் வெல்ல உற்பத்தியாளர்கள்
திணறுகின்றனர். தென்னை, பனை மட்டைகளை எரிபொருளாக பயன்படுத்தி அடுப்பு எரிய
வைக்கின்றனர். மழையால் அடுப்புகளில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், வெல்லம்
உற்பத்தி செய்ய முடியவில்லை. எரிபொருட்கள் கைவசம் இல்லாததால் சில ஆலைகளில்
வெல்லம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வெல்ல உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
ஆடி பண்டிகைக்கு வெல்லம் விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தோம்.
நடப்பாண்டு வெல்லம் விற்பனை சரியாக இல்லை. விற்பனை இல்லாததால் வெல்லம் விலை
கிலோவுக்கு 1.50 ரூபாய் குறைந்துள்ளது. 30 கிலோ மூடை உருண்டை வெல்லம் 720
முதல் 780 ரூபாய் வரையும், அச்சு வெல்லம் 740 முதல் 800 ரூபாய் வரையும்,
நாட்டு சர்க்கரை 1,300 முதல் 1,470 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நாட்டு
சர்க்கரை விலை மட்டும் மூடைக்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மஞ்சள் விலை
உயர்வால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பலர் மஞ்சளுக்கு மாறிவிட்டனர்.
கரும்பு உற்பத்தி சென்றாண்டு முதல் குறைவாக உள்ளது. கரும்பு உற்பத்தி
குறைவால் சில வாரத்துக்கு முன் வெல்ல உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டது. 50
சதவீத ஆலைகள் மட்டும் இயங்குகிறது. இன்னும் ஓரிரு மாதத்தில் வெல்லம் விலை
உயரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

