/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கியூ-ஆர் கோடுடன் 'பூத் சிலிப்' வினியோகம்
/
கியூ-ஆர் கோடுடன் 'பூத் சிலிப்' வினியோகம்
ADDED : ஜன 28, 2025 06:47 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு, பிப்.,5ல் நடக்கிறது. இதற்காக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: வழக்கமாக பூத் சிலிப்பில் வாக்காளர் விபரம், ஓட்டுச்சாவடி விபரம் மட்டும் இடம் பெறும்.இம்முறை தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் விபரத்தை, அதற்கான ஏஜென்ட்கள் மூலம் சென்னையில் பிரிண்ட் செய்து, எங்களுக்கு நேற்று முன்தினம் கிடைக்க பெற்றது. இதையடுத்து உடனடியாக பூத் சிலிப் வழங்கும் பணியை துவங்கினோம். முன்பு ஈரோட்டில் அச்சிடப்படும்.
சென்னையில் அச்சடிக்கப்பட்ட பூத் சிலிப்பில், மாநிலம், தொகுதி, வாக்காளர் பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண், தந்தை அல்லது கணவர் பெயர், பாகம் எண், பாகத்தின் பெயர், வரிசை எண், ஓட்டுச்சாவடியின் பெயர், வாக்காளர் விபரம் கடைசியாக பதிவேற்றம் செய்த நாள், 'சீப் எலக்ஷன் அதிகாரி' இணைய தள முகவரி, அவரது அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் இலவச அழைப்பு எண், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக விபரம், அவருக்கான இலவச அழைப்பு எண், தேர்தல் தேதி, வாக்காளிக்கும் நேரம் காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை மற்றும் லொக்கேஷனுடன் கூடிய க்யூ.ஆர்.கோடும் இடம் பெற்றுள்ளது.
தவிர, 'இந்த சீட்டு அடையாள ஆவணமாக ஏற்று கொள்ளப்பட மாட்டாது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூத் சிலிப் வழங்கும் பணியில், ஓட்டுச்சாவடி அலுவலர், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் என, 600க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாளில், 75,288 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.வரும், 31ம் தேதிக்குள் கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

