தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சாமிநாதன் வெள்ளகோவில் ஒன்றியத்தில் ஓட்டு சேகரிப்பு
தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சாமிநாதன் வெள்ளகோவில் ஒன்றியத்தில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 14, 2026 05:05 AM
காங்கேயம், காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம் வள்ளியரச்சல் ஊராட்சி பழனிகவுண்டன்வலசு, புஷ்பகிரி நகர், வரக்காளிபாளையம், இடையன்காட்டுவலசு, வள்ளியரச்சல், வடுகபாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், நல்லூர்பாளையம், செட்டியார்பாளையம், வரட்டுக்கரை, அமராவதிபாளையம், மேட்டாங்காட்டு வலசு, ராசாத்தாவலசு உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தாய்மார்கள், பூத்துாவி அமைச்சரை வரவேற்றனர்.
ஓட்டு சேகரித்து அமைச்சர் பேசியதாவது:- கடந்த ஐந்தாண்டில் பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு நமது அரசு செய்துள்ளது. அதில் என்னுடைய பங்கும் உள்ளது. காங்கேயம் தொகுதி வட்டமலை கரை அணைக்கு, மூன்று முறை தண்ணீர் கொண்டு வரப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பணிகள் சரிவர செய்யாததால், தண்ணீர் வருவது பிரச்னையாக இருந்தது.
இதை சரி செய்ய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க கொடிமுடியில் இருந்து முத்துார் வழியாக காங்கேயம், வெள்ளகோயில் பகுதிக்கு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் பள்ளி வருவதற்கு, காலை உணவு திட்டம் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. குழந்தைகள் படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டிலும் சிறந்து விளங்கிட, சிவன்மலையில் சிறு உள்விளையாட்டு அரங்கு கொண்டுவரப்பட்டது.
வேளாண் மக்களின் வாழ்வில் ஏற்றம் பெரும் வண்ணம் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக புதிய கறவை மாடுகள், ஆடு, நாட்டுக்கோழி, வாத்து என கால்நடைகளை வாங்க வழங்கப்படும் மூலதன கடன், 250 கோடி ரூபாயில் இருந்து 1,000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனையாக மாற்றப்படும்.
ஆண்டுக்கு ஆயிரம் சிறிய பால் பண்ணைகளை உருவாக்கிட அடுத்த ஐந்து ஆண்டுகளில், 5,000 பால் பண்ணை தொழில் முனைவோருக்கு மானியத்தினுடன் கடனுதவி வழங்கப்படும். பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.
