ADDED : ஏப் 20, 2026 04:44 AM

ஈரோடு:அ.தி.மு.க.,
வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு மனோகரன், பவானி கருப்பணன், பெருந்துறை
ஜெயகுமார், பா.ஜ., வேட்பாளர்களான ஈரோடு மேற்கு யுவராஜா, கிருத்திகா
ஆகியோரை ஆதரித்து அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, ஈரோடு,
வீரப்பன்சத்திரத்தில் நேற்றிரவு நடந்த பிரசார கூட்டத்தில்
பேசியதாவது:
கடந்த, 2011 - 21 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியின்
திட்டங்கள், சாதனைகள் பற்றி குறை கூற முடியாததால், அ.தி.மு.க., -
பா.ஜ., கூட்டணியை மதவாத கூட்டணி என ஸ்டாலின் கூறுகிறார்.
தி.மு.க.,வின் ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனை, திட்டங்களை கூறி
அ.தி.மு.க., ஆட்சியுடன் ஒப்பிட்டு விவாதம் செய்ய எங்கு அழைத்தாலும்
வருகிறேன் என்றால், அழைக்க மறுக்கிறார்.
பா.ஜ.,வின் அடிமை கட்சி
அ.தி.மு.க., என ராகுலும், ஸ்டாலினும் பேசுகின்றனர். அ.தி.மு.க., என்றும்,
யாருக்கும், எந்த காலத்திலும் அடிமை இல்லை. எங்களை விலைக்கு வாங்க
முடியாது.
கடந்த, 1999ல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.,வுடன் தி.மு.க.,
கூட்டணி வைத்தபோது, பா.ஜ., சிறந்த கட்சி என கருணாநிதி கூறினார்.
இன்று அவரது மகன், அக்கட்சியை மதவாத கட்சி என்கிறார். உங்கப்பா
கூட்டணி வைத்தபோது, மதவாத கட்சியாக தெரியவில்லையா.
காங்.,
கட்சியுடன் கூட்டணி முடிவாகாத நிலையில், தி.மு.க., - காங்.,
நிர்வாகிகள் டி.வி.,யிலும், பத்திரிகையிலும் மாறிமாறி கேவலமாக
பேசியதை நாடறியும். டில்லி சென்ற கனிமொழி, சோனியா, ராகுலுடன் பேசி
ஒப்பந்தத்தை முடித்தார். காங்., கட்சியின் அடிமையாக தி.மு.க.,
உள்ளது. காங்., வெளியேறினால், தி.மு.க., பாதிக்கும் என அஞ்சுகிறார்
ஸ்டாலின். ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சி அதிகாரம் இன்றி தி.மு.க.,வும்,
ஸ்டாலின் குடும்பத்தாரும் இருக்க முடியாது. மத்திய அரசு கொண்டு வந்த
மகளிர் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாவை தி.மு.க., - காங்.,
சேர்த்து எதிர்த்து, மக்களுக்கும், மகளிருக்கும் துரோகம்
இழைத்துள்ளனர். இவர்களை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாதீர்கள். இவ்வாறு
இ.பி.எஸ்., பேசினார்.
