ADDED : ஏப் 22, 2026 05:16 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் இதுவரை, 2 கோடியே, 99,870 ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேநேரம், 880 லிட்டர் அளவு மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு, 5.07 லட்சம் ரூபாய்.
விலை உயர்ந்த மற்றும் சாதாரணமான போதை பொருட்கள், 308 கிலோ பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு, 6 கோடியே, 8 லட்சத்து, 89,425 ரூபாய். பெருந்துறை தொகுதியில் மட்டும், புலனாய்வு துறையினர் தகவலின் பேரில், விலை உயர்ந்த போதை பொருள், 4.9 கோடி ரூபாய் மதிப்பில், 24.68 கிலோ எடை கொண்டதும், ஈரோடு கிழக்கில், 77 லட்சத்து, 81,775 ரூபாய் மதிப்பில், 201 கிலோ போதை பொருளும் பிரதானமானவை.
பவானிசாகரில், 52.70 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளி நகை, ஈரோடு மேற்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதியில், 5.66 லட்சம் ரூபாய் மதிப்பில் கவரிங் நகைகள், சட்டை, துண்டும், ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதியில், 22.56 லட்சம் ரூபாய் மதிப்பில் துணிகள், சட்டை, வேட்டி போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இவற்றில் பெரும்பாலானவை பில் இல்லை என்ற காரணத்தால் பறிமுதல் செய்து, ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டன.
