குண்டேரிப்பள்ளம் அணையை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
குண்டேரிப்பள்ளம் அணையை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 15, 2026 05:13 AM
கோபி,:கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையை துார்வார, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி தாலுகா, கொங்கர்பாளையம் கிராமத்தில் பவானி வடிநிலப்பகுதியில், குண்டேரிப்பள்ளம் ஆற்றின் குறுக்கே, அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வலது மற்றும் இடது கரை பாசனமாக, 2,498 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. குன்றி, விலாங்கோம்பை, மல்லியம் துருவம் ஆகிய இடங்களில் பெய்யும் மழையே அணைக்கு நீராதாரமாக உள்ளது. மலை முகடுகளுக்கு நடுவே, அணை அமைந்துள்ளதால் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழையின்றி, கடந்த ஜனவரி முதல், அணைக்கு நீர் வரத்தின்றி, முழு கொள்ளளவான, 42 அடியில், தற்போது 19 அடிக்கு மட்டுமே தண்ணீர் குட்டையாக தேங்கியுள்ளது. எனவே விவசாயிகள் தரப்பில், அணையில் உள்ள வண்டல் மண்ணை துார்வார கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கொடிவேரி அணை பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சுபிதளபதி கூறியதாவது: குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் கொள்ளளவு பகுதியில், 5 சதவீதம் மட்டுமே,பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற 95 சதவீத நிலப்பரப்பு வனத்துறையிடம் உள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவில், 40 சதவீதம் வண்டல் மண் மேவியுள்ளது. வண்டல் மண்ணை எடுத்தால் தான், அந்த இடத்தில் தண்ணீரை தேக்க முடியும். வண்டல் மண்ணை விவசாயிகள் எடுக்க அனுமதியோ அல்லது வனத்
துறையே அணையை துார்வார வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை வைத்து வருகிறோம். எனவே, அணையை வனத்துறையினர் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ------
இவ்வாறு அவர் கூறினார்.
