ADDED : அக் 15, 2025 12:53 AM
ஈரோடு,தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், 100 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர் வெளிநாட்டு பல்கலை கழகங்களில் உயர் கல்வி கற்க, கடன் வழங்கும் திட்டம் செயல்படுகிறது.
ஒரு மாணவருக்கு அதிகப்பட்சம், 15 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டு, பாடத்திட்டத்தின் செலவில், 85 சதவீதம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகமும், மீதமுள்ள, 15 சதவீதமாக, 2.25 லட்சம் ரூபாய் மாநில அரசும் வழங்கும். இதற்கான வட்டி ஆண்டுக்கு, 8 சதவீதமாகும். மாணவர்களிடம் இருந்து இக்கடனை அதிகப்பட்சமாக மீட்கும் காலம், 10 ஆண்டுகளாகும். இதற்கான விண்ணப்ப படிவம், www.tabcedco.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்பிக்கலாம்.