ADDED : டிச 19, 2025 07:58 AM
ஈரோடு: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், கலைஞர் கைவினை திட்டங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வசதியாக்கல் முகாம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து, 20 புதிய தொழில் முனைவோருக்கு, 16 கோடி ரூபாயில் கடனுதவி வழங்கி பேசியதாவது:
இத்திட்டம், முதல் தலைமுறை தொழில் முனைவோரை தொழில் முனைவோராக்குதல், தாழ்த்தப்பட்ட, பழங்கியினரை தொழில் முனைவோராக்க செயல்படுகிறது. கடந்த நிதியாண்டு முதல், 25 வகையான கைவினைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கலைஞர் கைவினை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மகளிர், திருநங்கைகள் தொழில் முனைவோராக்க, மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் அறிமுகம் செய்துள்ளனர். இதில், 10 லட்சம் ரூபாய் வரை திட்ட மதிப்பீடு உள்ள வியாபாரம், சேவை, உற்பத்தி சார்ந்த தொழில்களை, 25 சதவீத மானியத்துடன் அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை பெற்று தொழில் துவங்கலாம். இதுபோல பல திட்டங்கள் உள்ளன. தகுதியானவர்கள் பயன் பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.
கயிறு தயாரித்தல், பால் பண்ணை, பேக்கரி தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், 4 சக்கர பழுது நீக்க மையம், கனரக வாகனம், பால் பொருட்கள் தயாரிப்பு என, 20 தொழில் முனைவோருக்கு, 16 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது. முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
