ADDED : ஏப் 12, 2026 06:23 AM
தாராபுரம், ''தமிழகத்தில் இபிஎஸ் அலை வீசுகிறது,'' என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி அமைப்புகளில் உள்ளதுபோல், தாராபுரம் பகுதியிலும், உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் நிறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல், சட்டம், ஒழுங்கு சீர்குலைந்த இந்த திராவிட மாடல் ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்ற எண்ணம், ஒரு கோபம், அறச்சீற்றம், தாராபுரம் தொகுதி மக்களிடையே இருக்கிறது.
கடந்த முறை கல்விக்கடன் ரத்து போன்ற போலி வாக்குறுதி தந்து ஏமாற்றி விட்டார்கள். தி.மு.க., ஆட்சியை பார்த்த பின், மீண்டும் இ.பி.எஸ்., ஆட்சி வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் இ.பி.எஸ்., அலை, வீச துவங்கி உள்ளது. மத்திய அரசு திட்டங்கள் மக்களை சென்றடையாமல் ஸ்டாலின் அரசு தடுக்கிறது.
மதம் மாறியவர்களுக்கு, பட்டியல் இனத்தவர்களுக்கு சலுகை நீட்டிப்பது குறித்து அ.தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ளது. இது அக்கட்சியின் கொள்கை. இதில் பா.ஜ.,வுக்கு மாற்று கருத்து இருக்கலாம். இது பொது செயல் திட்டத்தில் வராது. இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் திருப்பூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சத்தியபாமா, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன்
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
