ஓட்டுப்பதிவுக்கு ஈரோடு மாவட்டம் ரெடி கேரளா, கர்நாடகா போலீஸ் வருகை
ஓட்டுப்பதிவுக்கு ஈரோடு மாவட்டம் ரெடி கேரளா, கர்நாடகா போலீஸ் வருகை
ADDED : ஏப் 22, 2026 05:15 AM
ஈரோடு, ''ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதிகளும் ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன,'' என்று, கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஓட்டுப்பதிவுக்காக அமைக்கப்பட்டுள்ள, 2,379 ஓட்டுச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும், 11,420 பணியாளர்களுக்கும் நாளை காலை, 3ம் கட்ட பயிற்சி வழங்கி, ஓட்டுச்சாவடி ஒதுக்கீடு பெற்று பணியிடங்களுக்கு சென்றடைவர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவைகளை, பூத்துக்கு எடுத்து செல்ல, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி, 259 வாகனங்களை தயாராக வைத்துள்ளோம். 23ம் தேதி காலை, 7:00 முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். கூடுதல் போலீஸ் தேவை என்பதால், கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், துணை ராணுவத்தினரையும் வரவழைத்துள்ளோம்.
தேர்தல் நாளில் வேட்பாளர், அவரது தலைமை முகவர், பொது பயன்பாட்டுக்கு ஒன்று என, 3 வாகனங்கள் மட்டும் பாஸ் பெற்று பயன்படுத்தலாம். மாவட்ட அளவில், 2 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொடக்குறிச்சியில், 90 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தது குறித்து, வருமான வரித்துறையிடம் தெரிவித்து அவர்கள் விசாரிக்கின்றனர். எங்கள் தரப்பில் போலீஸில் வழக்குப்பதிவு செய்கின்றனர். இவ்வாறு கூறினார். அப்போது டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா உடனிருந்தனர்.
