/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் அருகே கலெக்டர் கார் முற்றுகை
/
நம்பியூர் அருகே கலெக்டர் கார் முற்றுகை
ADDED : ஆக 11, 2011 03:52 AM
கோபிசெட்டிபாளையம் : நம்பியூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் மற்றும் கலெக்டர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நம்பியூர் அருகே ரங்கநாதபுரம் காலனியில் 700 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியினர் இறந்தால், அருகே உள்ள ஒரு மயானத்தில் உடலை அடக்கம் செய்து வந்தனர். மயானத்துக்கு செல்லும் சாலையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்துள்ளார். இதனால், இப்பகுதியினர் அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் வழியாக மயானத்துக்கு சென்றனர். மயானத்துக்கு செல்லும் சாலை வசதியை செய்து தர வேண்டும் என, மனுநீதி முகாம், ஆர்.டி.ஓ., அலுவலகம் என, பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.பொலவகாளிபாளையத்தில் நேற்று மனுநீதி முகாம் நடந்தது. முகாமில் கலெக்டர் காமராஜ், கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மனு நீதி முகாமில், ரங்கநாதபுரம் பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்ததோடு, தங்கள் பகுதியை நேரியாக வந்து பார்த்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர்.மனு நீதி நாள் முகாம் முடிந்தவுடன் கலெக்டர் காமராஜ், ஈரோடு செல்ல தயாரானார். தங்கள் பகுதிக்கு கலெக்டர் வரவில்லை என்பதை தெரிந்து கொண்ட பொதுமக்கள், நம்பியூர்- புளியம்பட்டி சாலையில் ரங்கநாதபுரம் காலனியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் கார், சம்பவ இடத்துக்கு வந்ததும், காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.கலெக்டர் காமராஜிடம் பொது மக்கள் கூறியதாவது:மயானத்துக்கு செல்ல வழியில்லை. அருகில் உள்ள ஒரு பள்ளத்தின் வழியாக சென்று வருகிறோம்.மழைக்காலத்தில் பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி விடுவதால் பள்ளத்தின் வழியாக செல்ல முடியவில்லை. அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதாகி கிடக்கிறது. தண்ணீர் தொட்டி, சாலை வசதி உள்ளிட்ட எவ்வித வசதியும் இப்பகுதியில் இல்லை. எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரங்கநாதபுரம் காலனிக்கு சென்று, அங்குள்ள குறைபாடுகளை கலெக்டர் காமராஜ் பார்வையிட்டார். ஆர்.டி.ஓ., பழனிசாமி, தாசில்தார் முருகன் ஆகியோரிடம், குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.அடிப்படை வசதி கேட்டு ரங்கநாதபுரம் காலனி மக்கள் திடீர் சாலை மறியல் மற்றும் கலெக்டர் காரை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.