/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூண் வண்டு கட்டுப்படுத்த புதிய மருந்து
/
கூண் வண்டு கட்டுப்படுத்த புதிய மருந்து
ADDED : ஆக 17, 2011 02:49 AM
சென்னிமலை:தென்னையைத் தாக்கும் சிவப்பு நிற கூண்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த, புதிய மருந்து அறிமுகமாகியுள்ளது.
தென்னை மரங்களை தாக்கி அழிக்கும் நோய்களுக்கு பஞ்சமில்லாமல் போய்விட்டது.
'ஈரியோபைட்' என்ற சிலந்தி, மிக அதிகமாக தென்னையை தாக்கியது. தற்போது,
குறைந்த வயதுடைய தென்னை மரங்களில், சிவப்பு நிற கூண்வண்டு தாக்குதல் அதிகம்
காணப்படுகிறது. மரத்தின் குறுத்து மற்றும் தண்டுப்பகுதியில் இவை
துவாரங்களை ஏற்படுத்தி முட்டையிடுகிறது. இவை தாக்கப்பட்ட மரம், உடனே
காய்ந்து விடுகிறது.
இக்கொடிய தென்னையை தாக்கும் வண்டுகளையும், புழுக்களையும் கொல்ல, இதுவரை
விவசாயிகள் கொடி நஞ்சு மாத்திரையான 'சல்பாஸ்' மாத்திரைகளை, மரத்தில்
துளையிட்டு வைத்து வந்தனர். அப்படி வைத்தால் மரத்தில் இருந்து ஒரு
மாதத்திற்கு இளநீர், தேங்காய் எதுவும் பறிக்க கூடாது. அப்படி பறித்து
உண்டால் மரணம் ஏற்படும் அபாய நிலை இருந்தது. இதனால், இந்த மாத்திரை வைக்க
பயந்தே சில விவசாயிகள் தென்னையை அழிய விட்ட நிகழ்வும் நடந்ததுண்டு.
தஞ்சை, 'டாரி பயோ டெக்' கம்பெனி ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வாளர்கள்
அருண்குமார், தார்சியாஸ் ஆகியோர், புதிய தொழில்நுட்பத்தில் மருந்து
வைக்கும் முறையை, சென்னிமலை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.
முகாசிபிடாரியூர் நேரு என்பவரது தோட்டத்தில் 45 மரங்கள்
பாதிக்கப்பட்டிருந்தன.
'சூடோகான், பெவேரிசைட், மெட்டாசைட் ஆகிய மருந்துகளை குறிப்பிட்ட
விகிதங்களில் மாட்டு சாணத்தில் கலந்து, வண்டு தாக்கிய துவாரத்தில் பூசி
விட்டால், வண்டு தாக்குதலில் இருந்து மரத்தை முழுவதுமாக காப்பாற்றி
விடலாம். இந்த மருந்துகளில் அதிகளவில் நஞ்சு தன்மை இல்லை.
தேவைப்பட்டால் மண்வழியாக சூடோகான், டெர்மகான், பெவேரிசைட், மெட்டாசைட்,
ஆர்கானிப்பிளஸ் போன்ற மருந்துகளை, மரத்தின் அடியில் வட்ட பாத்தியில் ஊற்ற
வேண்டும்' என, அவர்கள் விளக்கமளித்தனர்.