ADDED : செப் 04, 2011 12:29 AM
சத்தியமங்கலம்: சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவில், 242 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி, தமிழக வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: நாட்டில் பல்வேறு வேற்றுமைகள் நிலவி வருகிறது. நாம் தண்ணீருக்காக, காவிரிக்கு கர்நாடகாவையும், முல்லைபெரியாறுக்கு கேரளாவையும், பாலாற்றுக்கு ஆந்திராவையும் கையேந்தி நிற்கும் நிலை உள்ளது. மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, மழைநீர் சேகரிப்புக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
சுதந்திரத்தின்போது நாட்டில் 37 கோடி மக்கள் தொகை மட்டுமே இருந்தது. தற்போது, 121 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும். படித்த மாணவ, மாணவியர்தான், இப்பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலம் இணையதளத்தின் பிடியில் இருப்பதை உணர்ந்தே, பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்களை தமிழக முதல்வர் வழங்குகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் அருந்ததி முன்னிலை வகித்தார். முதல்வர் மோகன்தாஸ் வரவேற்றார். பவானிசாகர் எம்.எல்.ஏ., சுந்தரம், அந்தியூர் எம்.எல்.ஏ., ரமணிதரன், கோபி ஆர்.டி.ஓ., பழனியப்பன், முன்னாள் எம்.பி., காளியப்பன், அ.தி.மு.க., தொகுதி செயலாளர் செல்வம், முன்னாள் நகராட்சி தலைவர் பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். பேராசிரியை கிருத்திகா நன்றி கூறினார்.

