/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி பஸ்களை தடுக்கும் டி.எஸ்.பி.,
/
பள்ளி பஸ்களை தடுக்கும் டி.எஸ்.பி.,
ADDED : செப் 07, 2011 01:49 AM
ஈரோடு: ஈரோடு ஏ.ஆர்., குடியிருப்புக்குள் பள்ளி வாகனங்களை அனுமதிக்குமாறு, போலீஸார் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியில் தமிழக அரசு ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீஸாருக்கு குடியிருப்பு கட்டித் தரப்பட்டுள்ளது. டி.எஸ்.பி.,க்கள் நான்கு பேர், இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் 120 ஆயுதப்படை போலீஸார் வசிக்கின்றனர். இவர்களது குழந்தைகள், ஈரோடு, பவானி பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களை அழைத்துச் செல்ல, அந்தந்த பள்ளி பஸ்கள், போலீஸ் குடியிருப்புக்கு வருகின்றன. இங்கு வசிக்கும் டி.எஸ்.பி., ராஜ், குடியிருப்பு பகுதிக்குள், பள்ளி பஸ்கள் வருவதை தடுப்பதாக, போலீஸாரே புகார் கூறுகின்றனர்.
ஏ.ஆர்., குடியிருப்பு பகுதியில் வசிக்கும் போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூறியதாவது: இக்குடியிருப்பில், போக்குவரத்து போலீஸார் வசிக்க அனுமதியில்லை. இருப்பினும், போக்குவரத்து டி.எஸ்.பி., ராஜ் என்பவர் வசிக்கிறார். இப்பகுதியில் இருந்து போலீஸாரின் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஈரோடு மாநகரப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு படிக்க செல்கின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல, காலை 7.45 மணி முதல் 9 மணி வரை, எட்டுக்கும் மேற்பட்ட பள்ளி பஸ்கள் குடியிருப்புக்குள் வந்து குழந்தைகளை அழைத்து செல்கின்றன.
போக்குவரத்து டி.எஸ்.பி., ராஜ் தன்னிச்சையாக செயல்பட்டு, ஏ.ஆர்., குடியிருப்புக்குள், பள்ளி பஸ் வரக்கூடாது என, பஸ் டிரைவர்களை மிரட்டுகிறார். இதனால், பள்ளி பஸ்கள் உள்ளே வராமல், குடியிருப்பு வெளியே நின்றபடி செல்கின்றன. இப்பகுதி குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, எஸ்.பி.,யிடம் புகார் கூறவுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.