/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி அணையில் நுரையுடன் கொட்டும் தண்ணீர்
/
கொடிவேரி அணையில் நுரையுடன் கொட்டும் தண்ணீர்
ADDED : செப் 12, 2011 04:03 AM
கோபிசெட்டிபாளையம்:கொடிவேரி அணையில் அனைத்து அருவியிலும் தண்ணீர்
கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன் கடைகள்
அப்புறப்படுத்தப்பட்டதால் மீன் விற்பனையாளர்கள்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான
கொடிவேரி அணை உள்ளது. கொடிவேரி அணையில் குளிக்கும் வசதி நிறைந்ததாக உள்ளது.
விடுமுறை காலங்களில் மட்டும் அல்லாமல் விசேஷ நாட்களில் ஈரோடு, கோவை,
திருப்பூர், நாமக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகரி மற்றும் கேரளா,
கர்நாடாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் இங்கு
வருகின்றனர். கோபி மற்றும் சத்தியில் இருந்து நேரடியாக பஸ் வசதி இல்லாததால்
சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் டூவிலரில் வருகின்றனர். தற்போது
அக்னி வெயில் போல வாட்டுவதால் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் 1,000 பேரும், விடுமுறை நாட்களான சனி,
ஞாயிற்றுகளில் 1,500 பேர் வருகின்றனர்.
பவானிசாகர் அணையில் இருந்து கொடிவேரி அணைக்கு வருகிறது. பவானிசாகர் அணையில்
நேற்றைய நிலவரப்படி 86.49 கன தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2,198 கன
அடி தண்ணீர் வரத்தாகிறது. எல்.பி.பி., வாய்க்காலில் 2,300 கன அடி
தண்ணீரும், ஆற்றில் 1,000 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர்
அணையில் இருந்து 1,000 கன தண்ணீர் கொடிவேரிக்கு வருகிறது. கொடிவேரி
அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர்
திறக்கப்படுகிறது. அறுவடை பணி தீவிரம் அடைந்துள்ளதால் பாசனப்பகுதியில்
குறைந்தளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.கொடிவேரியில் தண்ணீர் நுரை பொங்க
கொட்டுகிறது. விடுமுறை நாட்களான நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர்
குவிந்தனர். தண்ணீர் அதிகம் சென்றதால் தடுப்பு கம்பிகள் உள்ள பகுதியில்
மட்டுமே பயணிகள் குளித்தனர். இளம்பெண்கள், குழந்தைகள் பலர் வேடிக்கை
பார்த்து விட்டு சென்று விட்டனர்.சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ள நிலையில்,
கொடிவேரி அணையில் இருந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா
துறை சார்பில் கொடிவேரி அணை 45 லட்சம் மதிப்பீட்டில்
மேம்படுத்தப்படுகிறது. மேம்பாட்டு பணிக்காக மீன் கடைகள் அனைத்தும்
அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மீன் வியாபாரிகள் அக்கரை கொடிவேரி செல்லும்
பாதை பகுதியில் மீன்கடைகள் வைத்துள்ளனர். கடைகள் இருப்பது சுற்றுலா
பயணிகளுக்கு சரிவர தெரியாததால் குளித்து விட்டு, சென்று விடுகின்றனர்.
இதனால் மீன் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.