/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தவறான புகாரால் பணியிழந்த அரசு ஊழியர்
/
தவறான புகாரால் பணியிழந்த அரசு ஊழியர்
ADDED : செப் 14, 2011 01:10 AM
ஈரோடு : முன்னாள் கதர் கிராமத் தொழில் அமைச்சரின் கவனக்குறைவால் பணியிழந்த, கதர் கிராம ஊழியர் பிழைக்க வழியின்றி வாடுகிறார்.ஈரோடு, மொடக்குறிச்சி பூந்துறை சாலையை சேர்ந்தவர் முருகன்(51).
மொடக்குறிச்சி கதர் மற்றும் கிராம கைத்தொழில் வாரியத்தில் சோப்பு வல்லுனராக பணியாற்றினார். தி.மு.க., ஆட்சியில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் பொய்யான குற்றச்சாட்டால் பணி நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. கதர் வாரியம், இவருக்கு மீண்டும் வேலை வழங்காமல், நிரந்தரமாக வேலையை விட்டு நிறுத்தியது.வேலையிழந்த முருகன் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், மரத்தடி எழுத்தராக பொழுதை கழிக்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவால், தனக்கு மீண்டும் பணி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் சுற்றி வருகிறார்.அவர் கூறியதாவது:காதி மற்றும் கிராம கைத்தொழில் வாரியம் ஈரோடு உதவி இயக்குநர் அலுவலகத்தில், சோப்பு வல்லுநராக, 1991ல் மொடக்குறிச்சியில் பணி நியமனம் செய்யப்பட்டேன். தொடர்ந்து நீலகிரி மாவட்டம், கூடலூர் வாரியத்தில் பணி செய்தேன். அப்போது, நான் ஆவணங்களை பொய்யாக தயாரித்து, அதன்பேரில் தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு நிதி வளர்ச்சி வங்கியில், பிற பணியாளர்கள் பெயரில் கடன் பெற உடந்தையாக செயல்பட்டதாக கூறி, சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.ஆனால், அதே வங்கி மேலாளர், இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில், போலி ஆவண தயாரிப்புக்கு 'டிப்போ மேலாளர் நமசிவாயம்தான் பொறுப்பானவர்' என குறிப்பிட்டுள்ளார்.தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட ஆவணம் மூலம், என் மீதான குற்றச்சாட்டு பொய் என தெரியவந்தது. என்னை பணி நீக்க, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் ஒப்புதல் அளித்துள்ளார். அமைச்சரை சந்தித்த போது, தனக்கே தெரியாமல் கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாக கூறினார்.பொறுப்பற்ற அதிகாரிகளாலும், அமைச்சராலும் பாதிக்கப்பட்ட நானும், எனது குடும்பமும் பட்டினியால் வாடுகிறோம். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து எனது குடும்பம் பிழைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.