/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கவுரவப் பிரச்னையால் சூடுபிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்
/
கவுரவப் பிரச்னையால் சூடுபிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்
கவுரவப் பிரச்னையால் சூடுபிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்
கவுரவப் பிரச்னையால் சூடுபிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்
ADDED : செப் 16, 2011 01:27 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றுவது தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கவுரவ பிரச்னையாகியுள்ளதால், தேர்தல் களம் மிகக் கடுமையான போட்டியை சந்திக்கவுள்ளது.
கடந்த 1871ல் உதயமான ஈரோடு நகராட்சி முதன்முறையாக மாநகராட்சியாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறது. விரிவாக்கம் செய்த ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள், நான்கு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. துவக்க காலத்தில் காங்கிரஸூம், தி.மு.க.,வும் மாறி, மாறி நகராட்சித் தலைவர் பதவியை பிடித்தன. 1986 முதல் 2006 வரை நடந்த நான்கு உள்ளாட்சித் தேர்தலிலும், தொடர்ச்சியாக தி.மு.க.,வே தலைவர் பதவியை கைப்பற்றியது.
அ.தி.மு.க., இதுவரை தலைவர் பதவியை பிடிக்கவில்லை. மாநகராட்சியான பின் முதன்முறையாக நடக்கும் தேர்தலில் மேயர் பதவியை பிடிப்பதற்கான பிரகாசமான வாய்ப்பு அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி, கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வுக்கு மாறியது. இதனால், மாநகராட்சி மேயர் 'சீட்'டை அ.தி.மு.க., நிச்சயம் விட்டுக்கொடுக்காது; தே.மு.தி.க., கடும் நெருக்கடி கொடுப்பதை தவிர்க்கும் என்றே கூறப்படுகிறது. ஆளுங்கட்சியாக அ.தி.மு.க., இருந்த போது நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும், ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியை தி.மு.க.,வே தட்டிச் சென்றுள்ளது. இதன் காரணமாக, தி.மு.க.,விடம் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கேற்ப மக்கள் செல்வாக்கு, போட்டியை சமாளிக்கும் திறன் கொண்டவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், யார் வேட்பாளரானாலும், கட்சியினர் கடுமையாக உழைத்தாலே வெற்றியை எளிதாக்க முடியும். தொடர்ந்து ஐந்தாவது முறையாக மேயர் பதவியை பிடிக்க வேண்டிய நெருக்கடி தி.மு.க.,வுக்கும் உள்ளது. ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியை இதுவரை சுவைக்காத அ.தி.மு.க.,வுக்கு, முதன்முறையாக மேயர் பதவியை பிடிக்க வேண்டிய நெருக்கடி அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மிகக் கடுமையான போட்டியை சந்திக்கவுள்ளது ஈரோடு மாநகராட்சி மேயர் தேர்தல் களம்.

