/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாநகராட்சியை பிடிப்பது மந்திரியா? "மாஜி'யா?
/
ஈரோடு மாநகராட்சியை பிடிப்பது மந்திரியா? "மாஜி'யா?
ADDED : செப் 27, 2011 12:14 AM
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி மேயர் தேர்தலில் இரு பெண்கள் போட்டியிட்டாலும், உண்மையான போட்டி அமைச்சர் ராமலிங்கத்துக்கும், முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கும் இடையேதான் நடக்கிறது.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் முதன்முறையாக மேயர் தேர்தலை ஈரோடு சந்திக்கிறது. அ.தி.மு.க., சார்பில், உள்ளூர் அமைச்சர் ராமலிங்கத்தின் விசுவாசியான; மாவட்ட மகளிரணி செயலாளர் மல்லிகா போட்டியிடுகிறார். மேயர் சீட் கிடைக்குமென எதிர்பார்த்த நகரச் செயலாளர் மனோகரன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களில் மனோகரனை சமாதானப்படுத்தும் விதமாக, கவுன்சிலர் 'சீட்' கொடுக்கப்பட்டு, துணை மேயர் அல்லது மண்டலத் தலைவர் பதவியை வழங்க கட்சி திட்டமிட்டுள்ளது. பழனிச்சாமிக்கு வருத்தமில்லை என்பதை காட்டும் விதமாக, வேட்புமனுத்தாக்கலின் போது, அவரும் அழைத்து வரப்பட்டிருந்தார். அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்புக்கு பின் அக்கட்சியில் நிகழ்ந்த குளறுபடிகளை கவனித்த தி.மு.க., - மல்லிகாவுக்கு போட்டியாக, மற்றொரு பெண்ணை நிறுத்தும் வகையில், செல்லப்பொன்னியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அ.தி.மு.க.,வைப் போல், தி.மு.க.,விலும் மேயர் சீட் கேட்டு, சிட்டிங் மேயர் குமார் முருகேஷ், முன்னாள் யூனியன் தலைவர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் செந்தில், காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜாவின் ஆதரவாளர் செல்லப்பொன்னிக்கு சீட் கிடைத்துள்ளது.
காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், ''நானும், மேலும் பலரும் மேயர் 'சீட்' கேட்டு கட்சியில் விருப்ப மனு அளித்தோம். மாவட்டத் துணைச் செயலாளர் செல்லப்பொன்னியை வேட்பளராக, கட்சி தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு வாய்ப்பு கிடைத்ததை; எனக்கு கிடைத்தாகவே கருதுகிறேன். இதே மனநிலையில்தான் 'சீட்' கிடைக்காத அனைவரும் உள்ளனர்,'' என்றார். இரு கட்சிகளும் கோஷ்டி பூசல்கள் ஏதுமில்லை என்பதை காட்டிக் கொள்ள, சோற்றுக்குள் பூசணிக்காயை மூடி மறைக்க முயல்கின்றன. அதேவேளை, மல்லிகாவை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் அமைச்சர் ராமலிங்கமும், செல்லப்பொன்னியை மேயராக்க வேண்டிய நிலையில் ராஜாவும் உள்ளனர். அவ்வாறு நடக்கவில்லையெனில், தங்கள் பதவிக்கு ஆபத்து என்பதை இருவரும் உணர்ந்துள்ளனர்.