/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிக்னல்களை பாதசாரிகள் கடக்க உதவி தேவை ஈரோட்டில் நோயாளிகள், முதியோர் திணறல்
/
சிக்னல்களை பாதசாரிகள் கடக்க உதவி தேவை ஈரோட்டில் நோயாளிகள், முதியோர் திணறல்
சிக்னல்களை பாதசாரிகள் கடக்க உதவி தேவை ஈரோட்டில் நோயாளிகள், முதியோர் திணறல்
சிக்னல்களை பாதசாரிகள் கடக்க உதவி தேவை ஈரோட்டில் நோயாளிகள், முதியோர் திணறல்
ADDED : செப் 27, 2011 12:27 AM
ஈரோடு: ஈரோட்டில் சிக்னல்களை பாதசாரிகள் கடக்க சில வினாடிகள் நேரம் ஒதுக்க வேண்டும்.
பாதசாரிகள் ரோட்டை கடக்கும் இடத்தை அடையாளம் காட்ட கோடு வரைய வேண்டும். சாலை விபத்துகளை தடுக்கும் வழிமுறைகளை, எஸ்.பி., மற்றும் கூடுதல் எஸ்.பி., ஆகியோர் ஆராய்ந்து, அதைத் தடுக்க தேவைப்படும் பொருட்களை வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், எந்தவொரு மாவட்ட போலீஸ் துறையும் முறையாக நிதியைப் பயன்படுத்துவதில்லை. அவ்வாறே வாங்கினாலும், ஸ்பான்சர் நிறுவனங்கள் மூலம் உபகரணங்களை வாங்கிவிட்டு, நிதியை மிச்சப்படுத்தி, தாங்கள் நற்பெயர் வாங்க அந்த நிதியை அரசுக்கே திருப்பி அனுப்பி விடுகின்றனர். இன்னும் சிலர் நிதியை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சாலை விபத்தை தடுக்கும் வகையில், முக்கிய சிக்னல்களை பாதசாரிகள் கடக்க உதவியாக 'ஜீப்ரா கோடு' எனப்படும் கோடுகள் ரோட்டில் வரையப்பட்டிருக்கும். ஈரோடு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து துறை சார்பில் போடப்பட்ட இந்த கோடுகள் அழிந்து போய்விட்டன.ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் ஒன்பது சிக்னல்களும், வடக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் மூன்று சிக்னல்களும் உள்ளன. இந்த சிக்னல்களை நொடிக்கு இரண்டு வாகனங்கள் கடக்கின்றன.
சிக்னல் பகுதியில், பாதசாரிகள் ஒருபுறம் இருந்து, இன்னொரு பக்கத்துக்கு இடம்பெயர, 'ஜீப்ரா க்ராஸிங்' எனும் கோடுகள் வெள்ளை பெயின்டால் வரையப்படுகிறது. கோடுகள் வரைந்து ஓராண்டுக்கு மேலாவதால், அவை இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன. ரோட்டை கடக்கும் பாதையை, பாதசாரிகளுக்கு அடையாளம் காட்ட மீண்டும் கோடு வரைய வேண்டும்.
சிக்னலில் வாகனங்கள் நிற்கும் ஒரு நிமிடம் மட்டுமே, பாதசாரிகள் ரோட்டை கடக்க முடிகிறது. அந்த வேளையிலும், வேறு ஏதாவது ஒரு ரோட்டில் இருந்து வாகனங்கள் பாய்ந்து வருகின்றன. இதனால், பாதசாரிகள் பாதி, பாதியாகத்தான் ரோட்டை தாண்ட முடிகிறது. குறிப்பாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னலில், மேட்டூர் ரோட்டில் இருந்து, அரசு மருத்துவமனை வருவதற்குள், பாதசாரிகள் திண்டாட வேண்டியுள்ளது. எனவே, பாதசாரிகள் கடக்க வசதியாக, அனைத்து ரோட்டிலும் சில வினாடிகள் போக்குவரத்தை நிறுத்தி, உதவ வேண்டும். அல்லது சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.