/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மேயர் பதவிக்கு தி.மு.க., - ம.தி.மு.க., மனு தாக்கல்
/
மேயர் பதவிக்கு தி.மு.க., - ம.தி.மு.க., மனு தாக்கல்
மேயர் பதவிக்கு தி.மு.க., - ம.தி.மு.க., மனு தாக்கல்
மேயர் பதவிக்கு தி.மு.க., - ம.தி.மு.க., மனு தாக்கல்
ADDED : செப் 29, 2011 01:16 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி தி.மு.க., மேயர் வேட்பாளர் செல்லப்பொன்னி வேட்பு
மனுத்தாக்கல் செய்தார்.அவருடன், தி.மு.க., மாவட்டச் செயலாளர் முன்னாள்
அமைச்சர் ராஜா, சிட்டிங் மேயர் குமார் முருகேஷ், தலைமை செயற்குழு
உறுப்பினர் சச்சிதானந்தம், கவுன்சிலர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர். மாவட்டச்
செயலாளர் ராஜா கூறியதாவது:தி.மு.க., வேட்பாளரின் வெற்றி
நிச்சயிக்கப்பட்டது. ஈரோடு நகராட்சியாக இருந்த போதே தி.மு.க.,தான் தலைவர்
பதவியில் இருந்துள்ளது. அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்த போது கூட
தி.மு.க.,தான் தலைவர் பதவியை வைத்திருந்தது. கடந்த ஐந்தாண்டில் மேயர்
குமார் முருகேஷ் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக எளிதில்
வெற்றிபெறுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.வேட்பாளர் செல்லப்பொன்னி கூறுகையில்,
''எனது தந்தை அரங்கராசன் இரண்டு முறை ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்து
மக்களிடம் நற்பெயர் பெற்றுள்ளார். நானும், ஈரோட்டை முதன்மை மாநகராட்சியாக்க
பாடுபடுவேன்,'' என்றார்.
பயபக்தியுடன் வந்த மாஜி: வேட்பாளர் செல்லப்பொன்னியுடன் வந்த முன்னாள்
அமைச்சரும், தி.மு.க., மாவட்டச் செயலாளருமான ராஜா கோவிலுக்கு சென்று
வந்தவர் போல, நெற்றி நிறைய குங்குமம் பூசியிருந்தார்.தேர்தல் நடத்தும்
அலுவலர் அறைக்குள் வந்து உட்கார்ந்த சிறிது நேரத்தில், என்ன நினைத்தாரோ
தெரியவில்லை, நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்துவிட்டார். மனுத்தாக்கல்
செய்யும் போது, நெற்றியில் குங்குமமின்றி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
வாங்கண்ணே! வரவேற்பு: ஈரோடு மாநகராட்சியில் நேற்றுமுன்தினம் மனுத்தாக்கல்
செய்த அ.தி.மு.க., மேயர் வேட்பாளருடன் வந்த, பொ.ப.து., அமைச்சர்
ராமலிங்கத்தை, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன், 'வாங்கண்ணே...' என,
சிரித்த முகத்தோடு அன்போடு வரவேற்றார்.அதேபோல், நேற்று தி.மு.க., வேட்பாளர்
செல்லப்பொன்னியுடன், முன்னாள் அமைச்சர் ராஜா வந்த போதும், 'வாங்கண்ணே...'
என, எழுந்து நின்று, சிரித்த முகத்தோடு வரவேற்று, கைகுலுக்கினார்.இதைப்
பார்த்தவர்கள், 'எல்லாரையும் சமாளிக்கும் பலே கில்லாடியாக மாநகராட்சி
கமிஷனர் உள்ளாரே' என்றனர்.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கான ம.தி.மு.க.,
வேட்பாளர் பூங்கொடி சாமிநாதன் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.ஈரோடு
மாநகராட்சி மேயர் பதவிக்கு ம.தி.மு.க., சார்பில், மாநிலத் தணிக்கைக் குழு
உறுப்பினர் பூங்கொடி சாமிநாதன் போட்டியிடுகிறார். இவர் நேற்று மதியம் 2
மணியளவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு
வந்தார்.தேர்தல் நடத்தும் அலுவலரும், கமிஷனருமான பாலச்சந்திரனிடம்
மனுத்தாக்கல் செய்தார். மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி எம்.பி., மாநில
நெசவாளர் அணி துணைச் செயலாளர் பெரியசாமி, ஈரோடு ஒன்றிய செயலாளர் முருகன்
ஆகியோர் உடனிருந்தனர். இவருக்கு மாற்று வேட்பாளராக நகரச் செயலாளர்
பொன்னுசாமி மனுத்தாக்கல் செய்தார்.* இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மேயர்
பதவிக்கு போட்டியிட வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், பகுஜன்
சமாஜ் கட்சி சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட பொன்னம்மாள் ஆகியோர்
மனுத்தாக்கல் செய்தனர்.

