/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உரம் விலை கடும் உயர்வு; பொட்டாஷ் தட்டுப்பாடு
/
உரம் விலை கடும் உயர்வு; பொட்டாஷ் தட்டுப்பாடு
ADDED : அக் 11, 2011 02:34 AM
சென்னிமலை : கீழ்பவானி பாசனப் பகுதியில் நடவுப் பணி துவங்கியுள்ள நிலையில், உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பொட்டாஷ் உரத்துக்கு கடும் தட்டுபாடு நிலவுவதால் சொட்டு நீர்ப்பாசன விவசாயிகள் அதிக பாதிப்படைந்து வருகின்றனர்.கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், சென்னிமலை வட்டாரத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் தண்ணீர் வந்து சேர்ந்தது.அதன்பின், நாற்றங்கால் தயார் செய்து, நடவுப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலிலும் இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திலும் நெல் நடவுப் பணி நடந்து வருகிறது.மாவட்டம் முழுவதும் நடவுப் பணி துவங்கி, வேளாண் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும், சொட்டு நீர்ப்பாசனத்தை நம்பி, தற்போது பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, கரும்பு, உட்பட பல பயிர்களுக்கும் உரத்தேவை மிகுதியாக உள்ளது.யூரியா, சல்பேட், சொட்டு நீரில் கலந்து வாழை போன்ற பயிர்களுக்கு கொடுக்கும் வெள்ளை பொட்டாஷ், டி.ஏ.பி., மஞ்சளுக்கு தெளிக்க வேண்டிய அமோனியம் நைட்ரேட் ஆகிய உரங்கள் விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளது. மேலும், சில உரங்கள் கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் அறவே இருப்பு கிடையாது. விவசாயப் பணிகள் பல இடங்களில் தொய்வடைந்துள்ளன.கவுண்டம்பாளையம் வாழை விவசாயி செல்வராஜ் கூறியதாவது:மத்திய அரசு மானியத்தை குறைத்து, உரம் விலை உயர்வுக்கு வழிவகை செய்துள்ளது. உரம் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. ஒரு மூட்டை உரம் வாங்க, பல கடைகள் ஏறி இறங்க வேண்டியுள்ளது.டி.ஏ.பி., உரம் கடந்த மாதம் 690 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, அதன் விலை 880 ரூபாய். பொட்டாஷ் உரம் மூட்டை 330க்கு விற்றது; தற்போது 565 ரூபாய்க்கு விற்கிறது.மேலும் வாழை, கரும்பு, போன்ற பயிர்களுக்கு, சொட்டு நீர்ப்பாசனத்தில் குழாய் மூலம் கலந்து விடும் வெள்ளை பொட்டாஷ் தற்போது கிடப்பதே இல்லை.ஏனோ அரசுகள் கண்டுகொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் கூட வாய் பேசாமல் உள்ளன. நாட்டில் உணவு பஞ்சத்துக்கு வழி வகுத்துவிடும், என்றார், வேதனை பொங்க.

