ADDED : பிப் 24, 2025 04:38 AM
மனைவி மாயம்; கணவன் புகார்
அந்தியூர்: அந்தியூர், அண்ணாமடுவை சேர்ந்தவர் மணிகண்டன், 29; கூலி தொழிலாளியான இவரின் மனைவி கோகிலா, 24; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மகன்களை பள்ளிக்கு விட்டு வரச் சென்ற கோகிலா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லை. மணிகண்டன் புகாரின்படி அந்தியூர் போலீசார், கோகிலாவை தேடி வருகின்றனர்.
* தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அதிகாரபட்டியை சேர்ந்த பாலு--மயில் தம்பதி மகள் சுவாதி, 17; ஈரோட்டில் கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு, தாயும், மகளும் வந்தனர். கடந்த, 21ம் தேதி மாலை வீட்டில் இருந்து சென்ற சுவாதி வீடு திரும்பவில்லை. புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
மாணவர்கள் பங்கேற்ற
விளையாட்டு போட்டி
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., விளையாட்டு அரங்கில், விளையாட்டு போட்டிகளுடன் கூடிய கலை விழா நடந்தது. இதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வரும் நான்காம் வகுப்பு முதல் கல்லுாரி வரையிலான, 220 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கட்டுரை, பேச்சு போட்டி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் சக்திவேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் பதக்கம் வழங்கினர். போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மொடக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவிகள் விடுதியினரும், அவல்பூந்துறை பள்ளி மாணவியர் விடுதியினரும் பெற்றனர்.
அங்காள பரமேஸ்வரி
கோவிலில் ௨௮ல் பொங்கல்
ஈரோடு: ஈரோடு பட்டக்காரர் தோட்டத்தில் அமைந்துள்ள ராஜகணபதி, அங்காளபரமேஸ்வரி, கருப்பண்ணசுவாமி, மும்மூர்த்திகள் கோவிலில் மகாசிவராத்திரி, பொங்கல் விழா நாளை பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 26ல் தீர்த்தம் எடுத்து வருதல், மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆறு கால பூஜை துவங்குகிறது. 27ல் அம்மனுக்கு அபிஷேகம், அக்னி கபாலம் பற்ற வைத்தல், அக்னி சட்டி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவில் அங்காள அம்மன் பதி பூஜை துவங்குகிறது. 28ல் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அம்மன் தேர் வீதி உலா நடக்கிறது.