ADDED : நவ 08, 2024 01:15 AM
மாநகரில் மாலையில் கொட்டிய மழை
ஈரோடு, நவ. 8-
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட, 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை நேற்று முதல், ௧௦ம் தேதி வரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாநகரில் நேற்று மதியம், 12:௦௦ மணி அளவில் திடீரென பரவலாக மழை பெய்தது. சிறிது நேரத்தில் நின்று விட்டது. அதன் பிறகு மழை பெய்யாவிட்டாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:௦௦ மணிக்கு வானம் இருண்டு லேசான காற்று மற்றும் இடியுடன் மிதமான மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரம் அதே வேகத்தில் கொட்டியது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
குறிப்பாக ஈரோடு ஆர்.கே.வி.சாலை, கொங்கலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி, கருங்கல்பாளையம், காவேரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. வெண்டிபாளையம் பகுதியில் இரு ரயில்வே நுழைவு பாலத்திலும் மழை வெள்ளம் குளம்போல் தேங்கியது.