எட்டு தொகுதிக்கான இ.வி.எம்., இயந்திரங்கள் 2 'கவுன்டிங்' மையத்தில் வைத்து 'சீல்'வைப்பு
எட்டு தொகுதிக்கான இ.வி.எம்., இயந்திரங்கள் 2 'கவுன்டிங்' மையத்தில் வைத்து 'சீல்'வைப்பு
ADDED : ஏப் 24, 2026 11:10 PM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இரண்டு ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைத்து, நேற்று காலை பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம், 15 லட்சத்து 84,947 வாக்காளர்கள், அதாவது, 90.10 சதவீதம் பேர் ஓட்டுப்பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம் மாலை வேட்பாளர்களின் முகவர்கள், மண்டல அதிகாரிகள் முன்னிலையில், ஒவ்வோர் ஓட்டுச்சாவடியிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், உள்ளிட்ட இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பெட்டியில் வைத்து, அதையும் சீல் வைத்தனர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம், போலீஸ் பாதுகாப்புடன், மண்டல அளவிலான பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையத்துக்கு புறப்பட்டன.
ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய தொகுதிகளுக்கு சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியிலும், கோபி, பவானிசாகர் தொகுதிக்கு கோபி அரசு கலை அறிவியல் கல்லுாரியிலும் ஓட்டு எண்ணும் மையம் அமைந்துள்ளது.
இங்கு இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்களை கொண்டு சென்று, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் வைத்து நேற்று காலை, 9:30 மணிக்கு அனைத்துக்கும் சீல் வைத்து பணியை நிறைவு செய்தனர். ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானிசாகர், கோபி, அந்தியூர் தொகுதி பெட்டிகள் வந்து சேர தாமதமானதே இதற்கு காரணம்.
ஓட்டுப்பெட்டிகள் அறைகள், ஓட்டு எண்ணும் மையங்கள், அதை சுற்றிய பகுதிகளில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவ வீரர்கள், இரண்டாம் அடுக்கில் பட்டாலியன் போலீசார், மூன்றாம் அடுக்கில் மாவட்ட ஆயுதப்படை போலீசார் துப்பாக்கி சகிதம் பாதுகாப்பில் உள்ளனர். இப்பணியில், 652 பேர் ஈடுபட்டுள்ளனர்.
