ADDED : ஜூன் 25, 2024 02:26 AM
காயத்துடன் திரியும் யானை
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனுார் அருகே சாலையோரத்தில், சில நாட்களாக ஒரு பெண் யானை, பின்னங்காலில் காயத்துடன் நடமாடி வருகிறது. இதை பார்த்த ஒரு சில வாகன ஓட்டிகள், யானையை படம் பிடித்துள்ளனர். இந்த போட்டோ தற்போது பரவி வருகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், காயத்துடன் திரியும் யானையை பிடித்து, உரிய சிகிச்சை அளிக்க விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய்பாபா கோவிலில்
கும்பாபிஷேக விழா
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையத்தில், பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலின் ஏழாமாண்டு கும்பாபிஷேக விழா இன்று காலை நடக்கிறது. இதையொட்டி உற்சவர் பாபா சிலைக்கு, 54 கிலோ விபூதியில் நேற்று அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, 108 வலம்புரி சங்காபிஷேகம், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை நடக்கிறது. இதை தொடர்ந்து பாபா பல்லக்கு ஊர்வலம், யாகசாலை கலச தீர்த்த அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.
எலக்ட்ரீஷியன் வீட்டில்
14 பவுன் நகை திருட்டு
பெருந்துறை: பெருந்துறை, காஞ்சிக்கோவில் ரோடு, தாய் நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 34, எலக்ட்ரீஷியன். கோவையில் உள்ள சகோதரி வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதாக, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மூலம் தகவல் வரவே, விரைந்து வந்தார். பீரோவில் வைத்திருந்த மனைவியின் தாலிக்கொடி, தங்க சங்கலி என, 14 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. சந்தோஷ் புகாரின்படி, பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
மெக்கானிக் வீட்டில்
நகை, பணம் திருட்டு
காங்கேயம்: காங்கேயம், களிமேடு, ஜனனி நகரை சேர்ந்த மெக்கானிக் சாலமன், 59; நேற்று காலை, ௧௦:௦௦ காங்கேயம் கடைவீதிக்கு சென்றவர், பொருட்களை வாங்கிக் கொண்டு, 11:00 மணியளவில் வீடு திரும்பினார். கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. புகாரின்படி காங்கேயம் போலீசார், கைவரிசை காட்டிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் ஆட்டோவுக்கு
தீ வைத்ததால் அதிர்ச்சி
காங்கேயம்: காங்கேயம், திரு.வி.க.நகரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன், 57; பயணிகள் ஷேர் ஆட்டோ இயக்கி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் வெடிச்சத்தம் கேட்டதால், எழுந்து வந்து பார்த்தார். ஆட்டோ தீப்பிடித்து எரிவதை பார்த்து பதறிப்போனார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். ஆனாலும் ஆட்டோவின் மேல்பகுதி, டிரைவர் மற்றும் பயணிகள் அமரும் இருக்கை முழுவதும் எரிந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் இருக்கை அடியில் இருந்த எல்.பி.ஜி., காஸ் வெடிக்காமல் தப்பியது.
இந்த சம்பவம் காங்கேயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், தீ வைத்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சேவல் சூதாட்டமாடிய
17 பேர் கும்பல் கைது
காங்கேயம், ஜூன் 25-
காங்கேயம் அருகே ஊதியூர் சுற்று வட்டார பகுதியில், சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக ஊதியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் ரோந்து சென்றனர்.
தட்டாரவலசு, ரத்தினசாமியின் சுள்ளிக்காட்டுத் தோட்டத்தில் சேவல் சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது. திருப்பூர், காங்கேயம், பல்லடம், குண்டடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 17 பேரை கைது செய்தனர். கும்பலிடம் இருந்து, 4 சண்டை சேவல், 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ரூ.3.75 லட்சத்துக்குதேங்காய் விற்பனை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 38,114 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 23.86 ரூபாய் முதல், 26.89 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 14,692 கிலோ தேங்காய், 3.75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
தாராபுரத்தில் குட்கா விற்ற4 கடைகளுக்கு அபராதம்
தாராபுரம்: திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர், தாராபுரம் வட்டார பகுதிகளில், குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தனர். இதில் புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட்ட நான்கு கடைகளுக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 15 நாட்களுக்கு வியாபாரம் செய்ய தடை விதித்தனர். பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய மூன்று கடைகளுக்கு, தலா, ௨,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தையல் இயந்திரம் பெறபெண்களுக்கு அழைப்பு
ஈரோடு: சமூக நலத்துறை சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தில், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தில், நவீன உயர்ரக இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பயனாளிகள், 20 முதல், 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆறு மாதம் தையல் பயிற்சி, சமூக நலத்துறையில் செயல்படும் சேவை இல்லங்களில் தையல் பயிற்சி, திறன் மேம்பாட்டு திட்டத்தில் தையல் பயிற்சி சான்று தேவை. தாசில்தாரால் வழங்கப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, ஆண்டு வருவாய், 72,000க்கு மிகாமல் உள்ளதற்கான சான்று, வயது சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ-2 ஆகியவற்றுடன், இ-சேவை மைய இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் தகவலுக்கு தொடர்புடைய வட்டாரத்தில் சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது 0424 2261405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.