ADDED : மார் 18, 2024 03:36 AM
பவானிசாகர் நீர்மட்டம்
59.40 அடியாக சரிவு
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், மூன்றாம் சுற்று தண்ணீர் சில நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீர்; காளிங்கராயன் பாசனத்திற்கு, 150 கன அடி தண்ணீர்;குடிநீருக்காக 100 கன அடி தண்ணீர் என, 1,050 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அதேசமயம் நீர் வரத்து இல்லாததால், அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று மாலை அணை நீர்மட்டம், 59.40 அடி, நீர் இருப்பு,7 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து, 39 கன அடியாக இருந்தது. கடந்தாண்டு இதே நாளில் அணை நீர்மட்டம், 91.12 அடியாக இருந்தது.
2,௦௦௦ டன் நெல் வருகை
ஈரோடு: ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 2,000 டன் நெல், தனி சரக்கு ரயிலில், ஈரோடு கூட்ஸ்செட்டுக்கு நேற்று வந்தது. நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்களை விரிய வைத்த
௧௮ கிலோ 'கட்டாபாறை'
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, துாத்துக்குடியில் இருந்து, 18 கிலோ எடையிலான கட்டாபாறை மீன் நேற்று விற்பனைக்கு வந்தது. இது முற்றிலும் முள் இல்லாத மீன். ஒரு கிலோ, 750 ரூபாய் என, 13,500 ரூபாய்க்கு மொத்தமாக விற்கப்பட்டது. முள் இல்லாததால் மிருதுவாக இருக்கும். சிறு குழந்தைகளும் சாப்பிடலாம். ஒரு ஓட்டல் கடைக்காரர், மீனை வாங்கி சென்றார். முன்னதாக, 18 கிலோ மீனை, வாடிக்கையாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
த.வெ.க., சார்பில்
உறுப்பினர் சேர்க்கை
ஈரோடு: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கிய நடிகர் விஜய், லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். ஆனாலும், கட்சி சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதன்படி ஈரோடு மாநகர தலைவர் ஹக்கிம் தலைமையில், மாநகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
கருங்கல்பாளையம், பெரியார் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாக சென்று, துண்டு பிரசுரம் வழங்கி, உறுப்பினராக சேர அழைப்பு விடுத்தனர். நிர்வாகிகள் பிரவின், நந்து, சஞ்சய், விஷால், பவானி, ஜெகன், சசி, தீபக், விஜய் உட்பட பலர் பங்கேற்றனர்.
எழுத்தறிவு தேர்வில்
21,453 பேர் பங்கேற்பு
ஈரோடு-
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் இரண்டாம் கட்ட எழுத்தறிவு தேர்வு, ஈரோடு மாவட்டத்தில், 1,111 மையங்களில் நேற்று காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடந்தது. ஆண்கள், 5,772, பெண்கள், 15,681 என, 21,453 பேர் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோட்டில் மாநகராட்சி எஸ்.கே.சி, சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்த தேர்வில், 26 பேர் பங்கேற்றனர்.

