கீழ்பவானி பாசனத்திற்குஇறுதி சுற்று தண்ணீர் திறப்பு
கீழ்பவானி பாசனத்திற்குஇறுதி சுற்று தண்ணீர் திறப்பு
ADDED : ஏப் 19, 2025 02:19 AM
புன்செய்புளியம்பட்டி::பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இறுதி சுற்று தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஜன.,10 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் வரத்து மற்றும் மழை பொழிவுக்கு ஏற்ப, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு மே 1ம் தேதி வரை ஐந்து சுற்றுகளாக, 12 டி.எம்.சி.,க்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் எனவும், இதன் மூலம் கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகள் பாசனப்பகுதியில் உள்ள, ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நான்காம் சுற்று தண் ணீர் கடந்த, 8ல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீர் நேற்று காலை திறக்கப்பட்டது.
முதற்கட்டமாக கீழ்பவானி வாய்க்காலில் நேற்று காலை, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலையில், 1,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 74.45 அடியாகவும், நீர் இருப்பு, 12.9 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 247 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நீர் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இறுதி சுற்று தண்ணீர் மே 1ம் தேதி வரை விடப்படும், முதற்கட்டமாக கீழ்பவானி வாய்க்காலில், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2,300 கன அடி வரை பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்,' என்றனர்.
