வனப்பகுதியோரம் தொடர்ந்து கொட்டப்படும் குப்பைஅபராதம் விதித்தும் பலனில்லை
வனப்பகுதியோரம் தொடர்ந்து கொட்டப்படும் குப்பைஅபராதம் விதித்தும் பலனில்லை
ADDED : மே 20, 2026 05:51 AM

சென்னிமலை:சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதி, 1,700 ஏக்கர் பரப்பளவை கொண்டது. யூனியன் அலுவலகத்தில் இருந்து காங்கேயம் ரோட்டில், 1 கி.மீ., துாரம், ஊத்துக்குளி ரோட்டில் பழனியாண்டவர் கோவில் வரை, 7 கி.மீ., துாரத்துக்கும் வனப்பகுதி நீண்டுள்ளது. இந்த வனப்பகுதிகளில் சிலர் கழிவுகளை கொட்டி வந்தனர். இதனால் வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணித்து கொட்டுபவர்களை கையும், களவுமாக பிடித்து அபராதம் விதித்து வந்தனர்.
ஆனால், இதையும் மீறி சென்னிமலை - காங்கேயம் ரோட்டோர வனப்பகுதிக்குள், இறைச்சிக்கழிவு மற்றும் பஞ்சு கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவு மூட்டை, மூட்டையாக வீசப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி, வனப்பகுதியும் சீர்கெட்டு வருகிறது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: சென்னிமலையில் இறைச்சி கடை வைத்திருக்கும் சிலர், கழிவு களை டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களிடம் கொடுக்காமல் வனப்பகுதியில் போட்டு செல்கின்றனர். அனைத்து இறைச்சி கடைகளிலும், துாய்மை பணியாளர்கள் முழுமையாக பெற்று கொள்ளும் வகையில் டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
வனத்துறையினர் கூறுகையில், 'நாங்கள் பல இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளோம். அதை மீறி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் காங்கயம் ரோட்டில், 400 மீட்டர் துாரத்திற்கு இருபுறமும் கம்பி வேலி அமைப்பதுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்த உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்' என்றனர்.
