தேவாலா நீர்வீழ்ச்சியில் மலர் பூங்கா: யானைகள் வழித்தடத்தால் ரத்து
தேவாலா நீர்வீழ்ச்சியில் மலர் பூங்கா: யானைகள் வழித்தடத்தால் ரத்து
ADDED : பிப் 04, 2026 07:15 AM

தேவாலா நீர்வீழ்ச்சி அருகே, மலர் பூங்கா அமைக்கும் முடிவை, தமிழக சுற்றுலா துறை கைவிட்டுள்ளது.
நாடு முழுதும் 40 இடங்களில், புதிய சுற்றுலா தலங்களை உருவாக்க, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், புதிய சுற்றுலா தலங்களை, தமிழக அரசு அடையாளம் கண்டது.
மாமல்லபுரம், ஊட்டி தேவாலா, ராமநாதபுரம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இவற்றில், ஊட்டி தேவாலா, தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என அழைக்கப்படுகிறது.
இங்கு கூடலுார் - பந்தலுார் சாலையில் உள்ள நீர்வீழ்ச்சியை காணவும், மலைப்பகுதியின் அழகை ரசிக்கவும், தேயிலை தோட்டங்களை பார்க்கவும், ஏராளமான சுற்றுலாப் பயணியர் வருகின்றனர்.
எனவே, இந்த இடத்தில், மலர் பூங்கா அமைக்க, தமிழக சுற்றுலாத் துறை விரும்பியது. இதற்கு, 70 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசும் முன்வந்தது.
ஆனால், நீர்வீழ்ச்சி அருகே, யானைகள் வழித்தடம் அமைந்துள்ளதால், அங்கு மலர் பூங்கா அமைக்க அனுமதிக்க முடியாது என, வனத்துறை தெரிவித்து விட்டது.
எனவே, அந்த திட்டத்தை சுற்றுலாத்துறை கைவிட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணியர், உள்ளூர் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -
