/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலவச ரேஷன் அரிசி கிலோ ரூ.20க்கு விற்பனை
/
இலவச ரேஷன் அரிசி கிலோ ரூ.20க்கு விற்பனை
ADDED : டிச 31, 2024 06:59 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி பகுதியில், 40க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்களில், 3,000க்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் ரேஷன் அரிசியை சமைத்து உண்கின்றனர். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு, வீடாக சென்று ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். இலவசமாக கிடைக்கும் அரிசிக்கு மாதம், 400 ரூபாய் கிடைப்பதால், ரேஷன் அரிசிக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வடமாநில தொழிலாளர்களால் ரேஷன் அரிசிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒதுக்கீடு குறைந்துள்ளதால், தாமதமாக ரேஷன் கடைக்கு வரும் மக்களுக்கு அரிசி கிடைப்பதில்லை. ஒரு சிலர் பல கார்டுகளுக்கு அரிசி வாங்கி விற்க துவங்கி விட்டனர். இவ்வாறு கூறினர்.
வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், 'அரசு இலவசமாக வழங்கும் அரிசியை விற்பது,சட்டப்படி குற்றம். அரிசி விற்போர் மீது நடவடிக்கை பாயும். ரேஷன் அரிசி விற்பது தொடர்பாக தெரியவந்தால், ரேஷன் கடைகளில் எழுதப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் புகார் செய்யலாம்' என்றனர்.