கனி மார்க்கெட் வணிக வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்
கனி மார்க்கெட் வணிக வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்
ADDED : நவ 27, 2026 06:51 AM

ஈரோடு:ஈரோடு
பன்னீர்செல்வம் பார்க் அருகில், அப்துல் கனி ஜவுளி மார்க்கெட் வணிக
வளாகம் உள்ளது. இங்குள்ள கடைகளுக்கு வாடகையை குறைக்க வலியுறுத்தி,
வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து
ஜவுளிக்கடை வியாபாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் ஸ்மார்ட்
சிட்டி திட்டத்தில், 51.59 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த
வளாகத்தில் மூன்று தளங்களில், 346 கடைகள் உள்ளன. முன்னுரிமை மற்றும்
ஏலம் அடிப்படையில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டன. அதிக வாடகை,
வியாபாரம் இல்லாததால் பல கடைகளை வியாபாரிகள் காலி செய்து விட்டனர்.
தற்போது, 190 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. வாடகையை குறைக்க
வலியுறுத்தி, மூன்றாண்டாக போராடி வருகிறோம்.
தற்போது
ஒப்பந்தம் புதுப்பிக்கும் காலம் வந்துள்ளதால், 5 சதவீதம் கூடுதலாக
ஒப்பந்த கட்டண தொகையை செலுத்த மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதேசாலையில்
உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வேறொரு வணிக வளாகத்தில் வாடகை
குறைவாக உள்ளது. அதைப்போல் இங்கும் வாடகையை குறைக்க வேண்டும். இவ்வாறு
கூறினர். காலை, 9:00 மணிக்கு அடைக்கப்பட்ட கடைகள், மதியம், 1:30 மணி
மூடப்பட்டிருந்தது. அதன் பிறகு கடைகள் திறக்கப்பட்டன.
மாநகராட்சியில் தர்ணா
கடையடைப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட வணிக வளாக ஜவுளி வியாபாரிகள், மாநகராட்சி
ஆணையரிடம் மனு அளித்தனர். அப்போது அதிகாரிகள் நடத்திய
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் அலுவலக வளாகத்தில் தர்ணா
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மேயரின் கணவர்
சுப்ரமணியம், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் மனோகரன், அதிகாரிகளுடன்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வணிக வளாகத்தில் காலியாக உள்ள
கடைகள், மூன்று மாதங்களில் ஏலம் போகவில்லையேல், அனைத்து கடைகளுக்கும்
வாடகை குறைப்பது தொடர்பாக, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், இரண்டு மாத வாடகை தொகையை ரத்து
செய்வது குறித்தும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.
