ADDED : ஆக 22, 2024 03:42 AM
சென்னிமலை: சென்னிமலை யூனியன், வரப்பாளையம் ஊராட்சி, ஓட்டகாட்டூர் பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்து நீர் சிப்காட் பகுதியில் செயல்படும் சாய, தோல் ஆலைகளின் கழிவு நீரால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம் ஒரு வேனில் வந்தவர்கள் பாலித்தின் கவர், மற்றும் பல தரப்பட்ட குப்பகைளை கொண்டு வந்து கொட்டினர். இதை பார்த்த ஊர் மக்கள் வேனை சிறை பிடித்தனர். உடனடியாக பொதுமக்கள் மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகம், சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து விசாரித்த போது, வேனில் சிப்காட் பகுதியில் செயல்படும் பழைய பேப்பர், அட்டைகளை அரைத்து புதிய அட்டை தயாரிக்கும் நிறுவனமான பாரியூர் அம்மன் என்ற நிறுவனத்தில் இருந்து, தேவையற்ற பாலித்தின் குப்பைகளை கொண்டு வந்து கொட்டியது தெரிய வந்தது.
இது குறித்து வரப்பளையம் ஊராட்சி செயலாளர் கொடுத்த புகார்படி, வேனை சென்னிமலை போலீசார் கஸ்டடி எடுத்தனர். விசாரணையில் கொட்டிய குப்பைகளில் எதுவும் கேடு விளைவிக்கும் கெமிக்கல் இல்லை என்பது உறுதியானது. அதன் பின்பே மக்கள் நிம்மதியடைந்தனர்.