/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைத்தறி இயக்குனர் ஆபீஸ் முற்றுகை: 138 பேர் கைது
/
கைத்தறி இயக்குனர் ஆபீஸ் முற்றுகை: 138 பேர் கைது
ADDED : நவ 12, 2024 11:55 PM
பவானி ; ஈரோடில் பவானி சாலையில் உள்ள, கைத்தறி மற்றும் துணி நுால் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை, ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் சார்பில், நேற்று முற்றுகையிட்டனர். பொதுச்செயலர் வரதராஜன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலர் சின்னசாமி, கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க தலைவர் சித்தையன், பொருளாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.
'கைத்தறி நெசவாளர்களுக்கு முறைப்படி போனஸ் வழங்க வேண்டும்; சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானிய தொகையை, குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்க வேண்டும்.
நெசவாளர் கூலியை வங்கி மூலம் வழங்காமல், 1,500 ரூபாய் வரையிலான கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும். தள்ளுபடி மானிய முன்மொழிவு குறித்து, இயக்குனரின் உத்தரவு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நெசவாளர்களின் அடிப்படை கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களை தடுத்த போலீசார், 64 பெண்கள் உட்பட, 138 பேரை கைது செய்தனர். கைதானவர்கள், மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

