ADDED : டிச 31, 2024 06:59 AM
ஈரோடு: அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, மூலவருக்கு அதிகாலை கணபதி அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மதியம், 1:30 மணிக்கு மூலவருக்கு 1,008 வடை மாலை சாற்றப்பட்டது. மதியம், 3:00 மணிக்கு வெள்ளிக் கவசம், மாலை, 6:00 மணிக்கு தங்க கவசம் சாற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசித்தனர்.
* ஜெயந்தி விழாவையொட்டி சூரம்பட்டி வலசு மகாவீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கைகாட்டி வலசு திருவள்ளுவர் நகர் லட்சுமி தருணகணபதி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வடைமாலை, வெற்றிலை மற்றும் துளசி மாலை சாற்றப்பட்டது. ஈரோடு ரயில்வே காலனி சித்தி விநாயகர் கோவிலிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், வடைமாலை சாற்றுதல் நடந்தது.
* சென்னிமலையில் ஈங்கூர் சாலையில் உள்ள செல்வ ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, உட்பட பல ேஹாம திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்தனர், அதை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. * சத்தியமங்கலத்தில் கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலையில் பல்வேறு யாகம், பூஜை நடந்தது. இதை தொடர்ந்து உற்சவர், மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், மஹா தீபாராதனை, சாற்று முறை செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலை சாற்றப்பட்டு, தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.