ADDED : பிப் 24, 2026 10:01 AM
திருப்பூர்: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பு தரப்பில் பல்வேறு அறவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுதும் சஷ்டியையொட்டி நேற்று ஹிந்து முன்னணியினர் கந்த சஷ்டி பாராயணம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் முழுதும், 350 இடங்களில் பாராயணம் மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம் பூங்கா நகரில் ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் பங்கேற்றனர். மேலும், மலை குன்றில் தீபம் ஏற்ற வேண்டும், மாசி மகமான பவுர்ணமியன்று கிரிவலம் செய்ய உள்ளதாக ஹிந்து முன்னணியினர் தெரிவித்தனர். திருப்பூர் மாநகர் செரங்காடு மண்டல பா.ஜ., சார்பில், திருப்பூர் பூ மார்க்கெட்டில் பா.ஜ., வினர் தெருமுனை பிரசாரம் செய்தனர். அதில் சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
* தாராபுரத்தில் மூன்று இடங்களில் கந்த சஷ்டி பாராயண நிகழ்ச்சி நேற்று நடந்தது. தாராபுரம், குளத்தபுஞ்சை தெருவில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பாலு தலைமையில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் சஷம் பாடினர். நேரு நகரில் தேசிய சிந்தனை பேரவை மாநில செயலாளர் முரளி பங்கேற்றார். இதேபோல் பா.ஜ., அலுவலகத்திலும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.
